அடியே திரைவிமர்சனம்
திட்டம் இரண்டு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கௌரி கிஷன் நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் அடியே. Sci Fi-உடன் டைம் டிராவல் மற்றும் Alternate Reality கதைக்களத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். அதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது. அத்தகைய எதிர்பார்ப்பை அடியே திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா என விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
பள்ளி பருவத்தில் இருந்து கதாநாயகி செந்தாளிணியை {கௌரி கிஷன்} ஒருதலையாக காதலித்து வருகிறார் கதாநாயகன் ஜீவா {ஜி.வி. பிரகாஷ்}. பள்ளியின் கடைசி நாளில் எப்படியாவது தனது காதலை செந்தாளிணியிடம் கூறி விடலாம் என முடிவு செய்கிறார் ஜீவா.
ஆனால், அவர் காதல் சொல்ல போகும் நேரத்தில் அவருடைய தாய் தந்தை இருவரும் விபத்தில் இறந்த செய்தி வருகிறது. தனது தாய், தந்தையின் மரணத்திற்கு பின் சொந்த வீட்டை இழந்து நடுத்தெருவில் நிற்கும் ஜீவா, நண்பனின் வீட்டிற்கு குடியேறுகிறார்.
இப்படியே சில ஆண்டுகள் செல்ல அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் தவித்து வரும் ஜீவா, இனி உயிருடன் இருக்க வேண்டாம் என முடிவு செய்து தற்கொலை முயற்சி செய்கிறார். இந்த நேரத்தில் அவருடைய ஒருதலை காதலி செந்தாளிணியின் குரல் தொலைக்காட்சியில் கேட்க தற்கொலை முயற்சியை கைவிட்டு, செந்தாளிணி தேடி தனது காதலை சொல்ல போகிறார்.
இப்படி ஒரு நேரத்தில் மீண்டும் அவருக்கு தடங்கல் ஏற்படுகிறது. இந்த தடங்கலுக்கு பின் என்ன நடந்தது? Alternate Reality-க்குள் ஜீவா எப்படி சென்றார் என்பதே படத்தின் கதை.
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கதாநாயகி கௌரி கிஷன் இருவரும் எந்த வகையிலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்துள்ளனர். அவர்களுடைய நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. வெங்கட் பிரபு தான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். மிர்ச்சி விஜய், மதும்கேஷ் கதாபாத்திரம் சிறப்பு.
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் எடுத்துக்கொண்ட கதைக்களம் சூப்பர். அதை படம் பார்ப்பவர்களுக்கு புரியும் படியாகவும் காட்டியுள்ளார். சில Sci Fi-னுடன் டைம் டிராவல் படங்களின் கதை என்னதான் விறுவிறுப்பான கதைக்களம் இருந்த புரியாது. ஆனால், இப்படத்தில் Alternate Reality என்றால் என்ன என்பதை எளிமையாக புரிய வைக்கும் வகையில் காட்டியுள்ளார். மேலும் தற்போதைய திரையுலக நட்சத்திரங்களை வைத்து Alternate Realityல் செய்த நகைச்சுவைகள் சூப்பர். அதற்கு பாராட்டு.
படத்தின் முதல் பாதி சற்று தொய்வு இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்றது. சில நகைச்சுவை ஒர்க்கவுட் ஆகவில்லை. மேலும் எமோஷனல் காட்சிகள் இன்னும் கூட அழுத்தமாக இருந்து இருக்கலாம். அவை அழுத்தமாக இல்லாத காரணத்தினால் திரைக்கதையின் முக்கிய இடங்கள் செல்ஃப் எடுக்கவில்லை.
ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் மனதை தொடவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவு சிறப்பு. எடிட்டிங் மற்றும் VFX ஓகே.
பிளஸ் பாயிண்ட்
ஜி.வி. பிரகாஷ், கௌரி கிஷன் நடிப்பு.
இரண்டாம் பாதி.
மைனஸ் பாயிண்ட்
முதல் பாதி.
எமோஷ்னல் காட்சிகள் அழுத்தமாக இருந்து இருக்கலாம்.
மொத்தத்தில் அடியே எதிர்பார்ப்புடன் படம் பார்க்க வந்த ரசிகர்களை ஏமாற்றவில்லை
உனக்கு எதுக்கு அந்த மாதிரி டிரஸ்.. நிகழ்ச்சி நடக்கும் போது என் ஆடையை மாற்ற சொன்னாங்க!.. டிடி பேட்டி