அகண்டா 2 திரை விமர்சனம்
போயபதி ஸ்ரீனு (Boyapati Srinu) இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி, பெரிதும் எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள அகண்டா 2 படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
அகண்டா முதல் பாகத்தில் தனது தம்பி முரளி கிருஷ்ணாவின் மகளுக்கு ஏதாவது கஷ்டம் ஏற்பட்டால் உடனடியாக அங்கு நான் வருவேன் என அகண்டா சத்தியம் செய்திருந்தார். வருடங்கள் கடந்து செல்ல முரளி கிருஷ்ணாவின் மகள் நன்றாக வளர்ந்து விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
எதிர் நாட்டில் உள்ள ஜெனரல் (general), இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணத்துடன் இந்தியர்களை கொன்று குவிக்கிறார். மேலும் பல சூழ்ச்சிகளையும் கையாள்கிறார். கடவுளை நம்பும் இந்திய மக்கள், இனி கடவுள் என்று ஒருவர் இல்லை என்று முடிவு செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார். அதற்காக இந்திய நாட்டில் உள்ள அரசியல்வாதியுடன் கைகோர்த்து மகா கும்பமேளாவிற்கு வரும் மக்கள் மேல் வைரஸை பரப்பி விடுகிறார்கள்.

இதனால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அந்த வைரஸ் பரவ, நாடு முழுவதும் பிரச்சனை வெடிக்கிறது. கடவுளை நம்பி கங்கையில் நீராட வந்த மக்கள் இறந்துவிட்டனர், இனி எங்கிருந்து வந்த அந்த கடவுள் நம்மை காக்க போகிறார் என கடவுள் மீதுள்ள நம்பிக்கையை விடுகிறார்கள் மக்கள்.
பரவிக்கொண்டிருக்கும் வைரஸை அளிக்கும் மருந்தை முரளி கிருஷ்ணாவின் மகள் ஜனனி கண்டுபிடித்துவிடுகிறார். ஆனால், இதை அறியும் எதிரி கூட்டம் விஞ்ஞானிகள் குழுவில் உள்ள அனைவரையும் கொன்று குவிக்கிறது. ஜனனியையும் கொள்ளை துரத்துகின்றனர். நாட்டை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் ஜனனியை காப்பாற்ற மீண்டும் அகண்டா வந்தாரா இல்லையா? கடவுள் நம்பிக்கை மீண்டும் மக்கள் மத்தியில் வந்ததா இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்
கதாநாயகனாக நடித்துள்ள பாலகிருஷ்ணா மொத்த படத்தை தனது தோளில் சிங்கிள் ஆளாக சுமந்து செல்கிறார். ஆக்ஷன், டான்ஸ், டயலாக் டெலிவரி என அனைத்திலும் அசத்தியுள்ளார்.
வழக்கமான தனது மாஸ் நடிப்பை இப்படத்திலும் சிறப்பாக கொடுத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை தவிர்த்து வசனங்களிலும் பட்டையை கிளப்பியுள்ளார் பாலகிருஷ்ணா.

பாலய்யா ரசிகர்களுக்கு இயக்குநர் போயபதி ஸ்ரீனு அகண்டா 2-வை விருந்தாக கொடுத்துள்ளார். ஆனால், பாலய்யாவின் ரசிகர்களை தாண்டி அனைவரிடமும் இப்படம் வரவேற்பை பெறுமா என்பதும் சந்தேகம் தான்.
அகண்டா கதாபாத்திரத்தை தவிர வேறு யாருக்கும் வலுவான ரோல் இல்லை. வில்லன் கூட பாலகிருஷ்ணாவுக்கு தான் பில்டப் கொடுக்கிறாரே தவிர, அவரை வீழ்த்த எந்த ஒரு திட்டமும் போடவில்லை.

திடீரென தீய சக்தியின் முழு உருவம் என்பது போல் ஆதி என்ட்ரி கொடுக்க, அவரையும் அசால்டாக இடது கையில் டீல் செய்கிறார் பாலய்யா. படத்தில் லாஜிக் இருக்கிறதா என்று கேட்டால், லாஜிக் எல்லாம் கிடையாது ஒன்லி பாலய்யா மேஜிக் தான் என்று சொல்வது போல் முழு படமும் உள்ளது.
மேலும், இடைவேளை காட்சியில் அகண்டா கம்பேக், அம்மாவுடன் சிவன் பேசும் காட்சி என சில விஷயங்கள் சுவாரஸ்யமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அகண்டா என்ட்ரிக்குப்பின் திரைக்கதை விறுவிறுப்பாக சென்றாலும் கூட, பல இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

அவர் கூறிய கருத்துக்களில் பலருக்கும் வேறுபாடு ஏற்படலாம். ஆனால் இந்த வயதிலும் ஒவ்வொரு வசனத்தையும் எப்படி கம்பீரமாக பேச வேண்டும் என்பதை அவர் சிறப்பாக காட்டியிருக்கிறார். அவருடைய நடிப்பு தான் மொத்த படத்திற்கு பலம்.
படத்திற்கு மற்றொரு பலம் என்றால் கண்டிப்பாக அது தமனின் பின்னணி இசை. மேலும் படத்தை அழகாக காட்டிய ஒளிப்பதிவு. மற்ற டெக்னீகள் விஷயங்களும் ஓகே.
பிளஸ் பாயிண்ட்
பாலகிருஷ்ணா நடிப்பு
தமனின் பின்னணி இசை
பாலய்யா ரசிகர்களுக்கு பிடித்த ஆக்ஷன் காட்சிகள்
கதைக்களம்
மைனஸ் பாயிண்ட்
படத்தின் நீளம்
லாஜிக் இல்லாத திரைக்கதை
வழக்கமான பாலகிருஷ்ணாவின் சண்டை காட்சிகள்
மொத்தத்தில் அகண்டா 2 பாலகிருஷ்ணாவின் ரசிகர்களுக்கு மாஸாக இருந்தாலும் மற்றவர்களுக்கு சோதனை தான்.
