அலங்கு: திரை விமர்சனம்
சங்கமித்ரா சௌமியா அன்புமணி தயாரிப்பில் வெளியாகியுள்ள 'அலங்கு' திரில்லர் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து பார்ப்போம்.
கதைக்களம்
மலைக்கிராமத்தில் வசிக்கும் தர்மா, காலேஜில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கூலி வேலை பார்த்து வருகிறார்.
அப்போது பெண் நாய் ஒன்றை காப்பாற்றி வளர்த்து வருகிறார். கடன் பிரச்சனைக்காக கேரளாவுக்கு நாயையும் கூட்டிச் செல்கிறார்.
அங்கு அவர் வளர்க்கும் நாய்க்காக பெரிய பிரச்சனையில் தர்மாவும் அவரது நண்பர்களும் மாட்டிக்கொள்ள, எப்படி அதில் இருந்து தப்பித்தார்கள் என்பதே படத்தின் கதை.
படம் பற்றிய அலசல்
ஹீரோவாக நடித்திருக்கும் குணாநிதி அப்பாவித்தனமான நடிப்பை அழகாக காட்டியிருக்கிறார். மலைக்கிராமவாசி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் அவர், எமோஷனல் காட்சிகள் மட்டுமின்றி சண்டைக்காட்சியிலும் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார்.
ஊர் தலைவரான செம்பன் வினோத் மகள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் தந்தையாகவும், உடல்மொழியில் வில்லத்தனத்தையும் காட்டுகிறார்.
அவரை விட அப்பானி சரத் நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக நாயை கொல்லும் காட்சியில் கொடூர முகத்தை காட்டுகிறார். எப்போதும் போல காளி வெங்கட் தனது கதாபாத்திரத்தை அசால்ட்டாக செய்திருக்கிறார்.
நாய்க்கும், மனிதனுக்குமான பிணைப்பை இயக்குநர் எஸ்.பி.ஷக்திவேல் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் அவர் அமைத்திருக்கும் காட்சிகள் ஈர்க்கின்றன.
சாதி பாகுபாடு, மலைக்கிராம மக்களுக்கு எதற்கு படிப்பு போன்ற விடயங்களையும் தொட்டு செல்கிறார். முதல் பாதி அளவிற்கு இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் குறைவாக இருக்கிறது.
ஆனாலும் எமோஷனல் காட்சிகளுடன் ஒன்ற முடிவதில் ஜெயிக்கிறது இப்படம். கதைக்கேற்ப பின்னணி இசையை அஜேஷ் அழகாக தந்திருக்கிறார். அதேபோல் பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு அருமை.
க்ளாப்ஸ்
கதைக்களம்
கதாப்பாத்திர தேர்வு
திரைக்கதை
நடிப்பு
பல்ப்ஸ்
கிளைமேக்ஸை இன்னும் வலுவாக வைத்திருக்கலாம்