சோசியல் மெசேஜ் சொன்ன சிறந்த தமிழ் படங்கள்! பராசக்தி முதல் ஜோக்கர் வரை..
தமிழ் சினிமாவில் மாஸ் மசாலா கமர்சியல் படங்கள் ஒருபக்கம் வந்தாலும், மறுபக்கம் சிறந்த சமூக கருத்துக்களை சொல்லும் படங்களும் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கின்றன.
மற்ற மொழி படங்கள் மக்களை entertainment செய்கின்றன, ஆனால் தமிழ் சினிமா தான் மக்களை educate செய்கிறது, அதனால் தான் இங்கே 1000 கோடி படம் இன்னும் கொடுக்க முடியவில்லை என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அந்த அளவுக்கு தமிழ் சினிமா சோசியல் மெசேஜ் சொல்லும் படங்களை கொடுத்து வருகிறது. அப்படிப்பட்ட படங்களைப்பற்றி பார்க்கலாம்.
பராசக்தி
1952ம்ஆண்டு ரிலீச் ஆன பராசக்தி தான் நடிகர் சிவாஜி கணேசனின் முதல் படம் என்பது எல்லோருக்கும் தெரியும். கலைஞர் கருணாநிதி தான் அந்த படத்திற்கு வசனங்கள் எழுதி இருந்தார்.
சமூகத்தில் ஒரு பெண் சந்திக்கும் சிக்கல்கள், பெண்களிடம் தவறாக நடக்கும் மோசமான நபர்கள் பற்றி கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி பேசும் வசனம் தற்போதும் நடிகர்களுக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படும் காட்சி தான்.
தமிழ் ரசிகர்கள் மனதிலும் இந்த படத்திற்கு நீங்காத இடம் கிடைத்து இருக்கிறது.
அன்பே சிவம்
2003ல் வெளியான அன்பே சிவம் படம் கமல்ஹாசனின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தில் சுந்தர் சி இயக்கியது.
அன்பு தான் எல்லாமே என கருத்து சொன்ன அந்த படம் வெளியானபோது தியேட்டரில் வரவேற்பு இல்லாமல் தோல்வி அடைந்தது. ஆனால் தற்போது அந்த படம் பெரிய அளவில் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.
பரியேறும் பெருமாள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர் மற்றும் ஆனந்தி ஆகியோர் நடிப்பில் 2018ல் வந்த படம் பரியேறும் பெருமாள்.
ஜாதி வெறி, ஆதிக்க மனப்பான்மையால் அரங்கேற்றப்படும் கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டிய படம் தான் பரியேறும் பெருமாள். இதே போன்ற கருத்துள்ள ஜெய் பீம் போன்ற படங்களும் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் சற்று யோசிக்க வைத்தவை தான்.
ஜோக்கர்
அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள், பணத்தை எப்படி எல்லாம் திருடுகிறார்கள், அதனால் சாதாரண மக்களின் உயிருக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதை காட்டிய படம் ஜோக்கர்.
இப்படி மோசமானவர்களை யாரும் தட்டி கேட்பது இல்லை, அதை எதிர்த்து போராடினால் அவனை ஜோக்கர் போல தான் இந்த சமுதாயமும் பார்க்கிறது. இப்படி ஒரு கருத்தை அழுத்தமாக சொன்ன படம் தான் ஜோக்கர்.
காக்கா முட்டை
வறுமை, தங்க சரியான இடம் இல்லை, பள்ளி செல்லும் சின்ன வயதில் பணம் சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருக்கும் இரண்டு சிறுவர்கள்.. அவர்கள் பிட்சா சாப்பிட வேண்டும் என்ற தங்கள் சின்ன ஆசையை நிறைவேற்றிக் கொள்ள படும் கஷ்டம் தான் இந்த படம்.
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி இல்லை என்பதை காட்டிய படம் 'காக்கா முட்டை'.