Bhartha Mahasayulaki Wignyapthi: திரை விமர்சனம்
சங்கராந்தி வெளியீடாக வந்துள்ள தெலுங்கு திரைப்படமான பர்த்த மஹசயலுகு விக்ஞப்தி (Bhartha Mahasayulaki Wignyapthi), மாஸ் மகாராஜா ரவி தேஜாவை காப்பாற்றியதா என்று பாப்போம்.

கதைக்களம்
ஒயின் தயாரிப்பு நிறுவனரான ராம் சத்யநாராயணா (ரவி தேஜா) வெளிநாடுகளில் தனது பிராண்டான அனார்கலியை கொண்டு சேர்க்க முயற்சிக்கிறார்.
அதற்காக ஸ்பெயினில் உள்ள மானஸா ஷெட்டியின் (ஆஷிகா) பிராண்ட் உடன் சேர்ந்து விநியோகம் செய்ய ப்ரோபோஸல் அனுப்புகிறார். ஆனால், அது நிராகரிக்கப்பட நேரில் சென்று காரணம் கேட்க கிளம்புகிறார்.

அங்கு மானஸாவை சந்திக்கும் ராம், அவரிடம் உண்மையை கூறாமலேயே பழகுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கின்றனர். எனினும் மானஸா அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், ஹைதராபாத்திற்கு வந்து மனைவி பாலாமணியுடன் (டிம்பிள் ஹயாதி) வாழ்க்கையை தொடர்கிறார்.
இந்த சூழலில் ஆஷிகா எதிர்பாராத விதமாக ராமை ஹைதராபாத்தில் சந்திப்பதுடன் இரண்டு வாரங்கள் இங்கேயே இருக்கப்போவதாக கூறுகிறார்.

தன்னைப் பற்றிய உண்மை மானஸாவுக்கு தெரிந்தாலோ அல்லது மானஸா குறித்து மனைவிக்கு தெரிந்தாலோ தன் வாழ்க்கை என்னவாகுமோ என ராம் பயப்பட, அதன் பின்னர் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
சங்கராந்தி பண்டிகையை கொண்டாடும்படி படம் இருக்க வேண்டும் என்பதற்காகவே காமெடி, ஆட்டம் பாட்டம் என இப்படத்தை இயக்கியுள்ளார் கிஷோர் திருமலா.
ரவி தேஜாவும் தனது வழக்கமான மாஸ் மசாலாவும் விட்டுவிட்டு புதுமுக கதாநாயகன் போல நடித்திருக்கிறார். அவர் படம் முழுக்க துறுதுறுவென நடித்து அட்டகாசம் செய்துள்ளார்.
தனக்கே உரிய பாணியில் காமெடி காட்சிகளில் தூள் கிளப்பும் ரவி தேஜா, பாடல்களில் எனர்ஜிடிக் ஆக அமர்க்களம் செய்துள்ளார். ட்ரைலரிலேயே துப்பாக்கி, கத்தி என வன்முறையாக நடித்து வந்ததால் ஒரு இடைவெளி வேண்டும் என்று கூறி ரவி தேஜா தன் ரசிகர்களை தயார்படுத்திவிட்டார்.

அதற்கேற்றாற் போல் ட்ரைலரில் வந்த சண்டைக்காட்சியைக் கூட கட் செய்துவிட்டு, பேருக்கு ஒரு சண்டைக்காட்சியை வைத்தலில் அவரது மாற்றம் தெரிகிறது. ஆஷிகா ரங்கநாத், டிம்பிள் ஹயாதி என இரண்டு கதாநாயகிகள். இவருக்கும் நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும், தங்கள் வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
அதே சமயம் பாடல்களில் இருவரும் மிரட்டுகின்றனர். சுனில், வெண்ணிலா கிஷோர், சத்யா ஆகிய மூவரும் காமெடிக்கு பெரிதும் உதவியுள்ளனர். ஆனாலும் ரவி தேஜாதான் சோலோவாக ஸ்கோர் செய்கிறார்.
முதல் பாதி கலகலப்பாக சென்றாலும், இரண்டாம் பாதி ஆரம்பத்தில் சற்று தொய்வாகி பின் வேகமெடுக்கிறது. பாடல்கள் அமைக்கப்பட்ட இடங்கள் ஒட்டவில்லை.

எனினும், கடைசி பாடலை 'சித்தி' உள்ளிட்ட சீரியல்களின் டைட்டில் டிராக்களை வைத்து மிக்ஸ் செய்து, பார்வையாளர்களை ஆட்டம்போட வைக்கிறார் இசையமைப்பாளர் பீம்ஸ் செசிரோலியோ.
ரவி தேஜாவின் மனசாட்சி கேமராவை பார்த்து 4th பிரேக் செய்வது, சிறுவனுக்கு பயப்படுவது, சில இடங்களில் உறைந்து நிற்பது, ஹிட் படத்தின் பெயரை சொல்லி அடிப்பது என பல வேலைகளை பார்த்து இயக்குநர் நம்மை சிரிக்க வைக்கிறார்.
என்றாலும் இரண்டாம் பாதியில் திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம். தொடர் தோல்வி படங்களை கொடுத்த ரவி தேஜாவை இப்படம் காப்பாற்றியுள்ளது என்றே கூறலாம்.
க்ளாப்ஸ்
ரவி தேஜாவின் ஒன் மேன் ஷோ
காமெடி
பாடல்கள்
பல்ப்ஸ்
ஒரு சில டல் மொமெண்ட்ஸ்
மொத்தத்தில் இந்த பர்த்த மஹாசயலுகு விக்ஞப்தி சங்கராந்திக்கு டீசண்டான கொண்டாட்டம்தான்.
