இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம்!!
10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது.
இந்த விருது வழங்கும் விழாவில், “கேப்டன் மில்லர்” படம், உலகின் பல சிறந்த வெளிநாட்டுப் படங்களுடன் இணைந்து பரிந்துரைக்கப்பட்டது, எனினும் அனைத்துப் படங்களையும் தாண்டி, லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நடந்த மதிப்புமிக்க 10 வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளின் போது, சத்யஜோதி பிலிம்ஸின் ‘கேப்டன் மில்லர்’ ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருது’ பெற்றுள்ளது. இந்த செய்தினை ரசிகர்கள் தற்போது, உற்சாகத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த, கேப்டன் மில்லரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியிருந்தது. இப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்படப் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
கேப்டன் மில்லர், திரையரங்கு வெளியீட்டின் போதே, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், மிகப்பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. அதனைத் தொடர்ந்து, ஓடிடியில் வெளியான இப்படம், உலகெங்கிலும் உள்ள 14 நாடுகளில் டாப் 10 தரவரிசையில் இடம் பிடித்தது. மேலும் இது இந்தியா உட்பட 9 நாடுகளில் டாப் 10 படங்களில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தது.