செயின்ஸா மேன்: திரை விமர்சனம்
ஜப்பானிய அனிமேட்டட் டார்க் பேண்டஸி படமாக வெளியாகியுள்ள செயின்ஸா மேன்: ரெஸ் ஆர்க் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.
கதைக்களம்
டெவில் வேட்டையர்களின் லீடரான மகிமா மீது லார்ட் செயின்ஸா என்றழைக்கப்படும் டெஞ்சிக்கு ஈர்ப்பு இருக்கிறது. அவரை எப்படியாவது கவர வேண்டும் என்று நினைக்கிறார்.
சுறாவும், மனிதனும் கலந்த பீம் மக்கள் பார்வையில் படாமல் பின்தொடர வேண்டும் என்ற நிபந்தனையுடன் டெஞ்சி செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின்னாலேயே செல்கிறார். இந்த சூழலில் போன் பூத் ஒன்றில் ரெஸ் என்ற பெண்ணை டெஞ்சி சந்திக்கிறார்.
அவர் மீதும் ஈர்ப்பு ஏற்பட இருவரும் பழக ஆரம்பிக்கின்றனர். இதற்கிடையில் டிவிஷன் 4ஐச் சேர்ந்த டெவில் வேட்டையரான அக்கி, ஏஞ்சல் டெவில் உடன் பயணிக்கிறார்.
இந்த நிலையில் ரெஸ் மீது காதல் வயப்படும் டெஞ்சி அவரை முத்தமிடுகிறார். அப்போது அவருக்கு ஆபத்து ஏற்பட, அவர் எப்படி தப்பித்தார்? ரெஸ் யார்? என்ற கேள்விகளுக்கு விடையே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
மங்கா சீரிஸில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம்தான் இந்த செயின்ஸா மேன்: ரெஸ் ஆர்க். டீமன் ஸ்லேயர் தொடரைப் போல சீரிஸில் சக்கைபோடு போட்ட தொடர்தான் செயின்ஸா மேன். டெஞ்சி என்ற 16 வயது சிறுவன் பொச்சிடா டெவிலுடன் போட்ட ஒப்பந்தத்தின்படி, அவன் இறந்த பிறகு செயின்ஸா மேன் ஆக உயிர்த்தெழுகிறான்.
மனிதனாக நடமாடும் டெஞ்சி, சண்டை என்று வந்துவிட்டால் தனது உடலில் உள்ளக செயினை இழுத்தால் செயின்ஸா மேனாக மாறுவான். பின் தாறுமாறாக சண்டையிட்டு எதிரிகளை கொல்வான். அவன் வாழும் உலகம் என்பது மனிதர்களும், டெவில்கள் மற்றும் பாதி மனிதன் பாதி டெவில்கள் உலவும் ஜப்பான். டெவில்களில் நல்லது, கெட்டது என்று இருப்பதனால் அவற்றுடன் ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்ளலாம்.
ஏனெனில் டெவில்களுக்கு இரத்தம், உடலின் சதை வாழ தேவைப்படும். இந்த ஆரிஜின் கதையை தெரிந்த பின் இந்த செயின்ஸா மேன்: ரெஸ் ஆர்க் படத்தைப் பார்த்தால்தான் பார்வையாளர்களுக்கு புரியும். இப்படத்தில் டெஞ்சி மிகவும் சக்தி வாய்ந்த பாம் டெவிலை எதிர்கொள்கிறான்.
அதனுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டாலும் அடி வாங்குவது என்னவோ டெஞ்சிதான். அந்தளவுக்கு சக்திவாய்ந்த பாம் டெவில் ஊரில் மக்கள் பலரை கொல்கிறது. அந்த ஆக்ஷ்ன் காட்சிகள் எல்லாம் இரத்தக்களரிதான். முதல் பாதி காதல், காமெடி என செல்ல, பாம் டெவில் என்ட்ரி ஆனவுடன் சூடுபிடிக்கிறது திரைக்கதை.
ரெஸுடன் பழகும் நேரங்களில் டெஞ்சியின் மைண்ட் வாய்ஸ் 'எனக்கு மகிமாவைதான் பிடித்திருக்கிறது, ஆனால் என் உடல் ரெஸை கேட்கிறது' என்று பேசும் இடம் சிரிப்பு வெடி. கென்சுகி உஷியோவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆக்ஷ்ன் காட்சிகளிலும் சரி, ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.
ஏஞ்சல் டெவில் ஓர் காட்சியில் அக்கியுடன் பேசும் வசனம் எமோஷனல் டச். லார்ட் செயின்ஸா, லார்ட் செயின்ஸா என்று கூறி உணர்ச்சிவசப்படும் பீமின் கதாபாத்திரமும் நல்ல என்டர்டைன்டெயின்மென்ட்.
செயின்ஸா மேன் வர தாமதமாவது பொறுமையை சற்று சோதித்தாலும், எந்த இடத்தில் அவர் வெளியேற வருகிறார் என்பதில்தான் பொறிபறக்க வைத்துள்ளார் இயக்குநர் டட்சுயா யோஷிஹரா. என்றாலும் இரத்தம் தெறிக்கும் காட்சிகள், நியூடிட்டிக்காக இது குழந்தைகளுக்கான படம் அல்ல.
க்ளாப்ஸ்
பரபர திரைக்கதை, இசை, சண்டைக் காட்சிகள்
பல்ப்ஸ்
முதல் பாதியில் கொஞ்சம் டல் அடிப்பது, செயின்ஸா மேன் என்ட்ரி தாமதமாவது