துரந்தர் (Dhurandhar): திரை விமர்சனம்
ரன்வீர் சிங், சஞ்சய் தத் நடிப்பில் வெளியாகியுள்ள துரந்தர் இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போமா.

கதைக்களம்
1999ஆம் ஆண்டு கந்தகாரில் இந்திய விமானம் கடத்தப்படுகிறது. உளவுத்துறை அமைப்பின் தலைவரான மாதவன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
ஆனால் அது தோல்வியில் முடிய, இரண்டு ஆண்டுகளில் டெல்லி பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கெல்லாம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று மாதவன் கூற, ஹம்ஸா என்ற பெயரில் குடியேறியாக பாகிஸ்தானுக்குள் நுழைகிறார் ரன்வீர் சிங்.

முதலில் ஒரு ஜூஸ் கடையில் வேலைக்கு சேரும் அவர், கராச்சியில் பெரும் புள்ளியாக இருக்கும் அக்ஷய் கண்ணாவின் நம்பிக்கையை பெறுகிறார். பின்னர் ஐஎஸ்ஐ மேஜர் அர்ஜுன் ராம்பாலை சந்திக்கின்றனர் அக்ஷய், ரன்வீர் குழு. அவர் பலுசிஸ்தானில் இருந்து துப்பாக்கிகளை வாங்கி வரும் டீலினை கொடுக்கிறார்.
அந்த இடத்தில்தான் போலி ரூபாய் நோட்டுகளை இந்தியாவில் புழக்கத்தில் விடும் திட்டத்தை செய்ய போகிறார்கள் என்பதை ரன்வீர் அறிகிறார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுக்கள் இந்தியா மீது என்னென்ன சதித் திட்டங்களை அமல்படுத்தினார்கள்? அவற்றை முறியடித்து ரன்வீர் சிங் பதிலடி கொடுத்தாரா? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
உரி: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் படத்தை கொடுத்த ஆதித்யா தர் இப்படத்தை இயக்கியுள்ளார். காந்தகார் விமானக் கடத்தல், தாஜ் ஓட்டல் தாக்குதல் போன்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் அரசியல், பயங்கர செயல்கள் குறித்த காட்சிகளாக இருந்தாலும் படம் ஆக்க்ஷன் மோடிலேயே செல்வதால் விறுவிறுப்பாகவே முதல் பாதி நகர்கிறது. ஆனால், முதல் பாதி இரண்டு மணிநேரம் என்பதால் பாப் கார்ன் ஸ்நாக்ஸ் வாங்கிக்கொண்டு செல்லலாம்.

ரன்வீர் சிங் உளவாளி கதாபாத்திரத்தை முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளார். ஒரு கேரக்ட்டரின் விரல்களை வெட்டும் காட்சியில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார். அதே சமயம் சாரா அர்ஜூனுடன் நன்றாக ரொமான்ஸ் செய்கிறார். ஆனால் பல இடங்களில் ரன்வீர் , சாரா கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகவில்லை.
இந்தியில் முதல் படம் என்றாலும் சாரா நல்ல நடிப்பை தந்துள்ளார். உளவுப்பிரிவு தலைவராகமாதவன் வசன உச்சரிப்பிலேயே மிரட்டுகிறார். மறுபுறம் அக்ஷய் கண்ணா வில்லத்தனத்தில் அதகளம் செய்துள்ளார்.

ரஹ்மான் கதாபாத்திரத்தை லெஃப்ட் ஹேண்டில் கையாண்டுள்ளார். அதே போல் சஞ்சய் தத் ஹவ்வா ஹவ்வா பாடலுடன் அறிமுகமாகி த்ரில் மொமெண்ட் கொடுக்கிறார். அவரும் அக்ஷய் கண்ணாவும் மோதும் காட்சி மிரட்டல். படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் கொடூரமாக உள்ளன. அதன் தீவிரத்தை குறைத்திருக்கலாம்.
தாஜ் ஓட்டல் தாக்குதல் காட்சியை பார்த்து உடையும் இடத்தில் ரன்வீர் நடிப்பில் மிளிர்கிறார். ஆனால் அவரது அதிரடி ஆட்டம் இரண்டாம் பாதியில் தான் தொடங்கும் என்று லீட் கொடுத்துள்ளனர். அரசியல் விவகாரங்கள், வெளிநாட்டு செய்திகளை உற்று நோக்கும் பார்வையாளர்களுக்கு இந்த படம் செம ட்ரீட்.

க்ளாப்ஸ்
திரைக்கதை
மேக்கிங்
பின்னணி இசை
நடிகர்கள் பங்களிப்பு
பல்ப்ஸ்
நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்
மொத்தத்தில் இந்த துரந்தர் வித்தியாசமான ஸ்பை த்ரில்லர். கண்டிப்பாக திரையரங்கில் பார்க்கலாம்.
