பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இயக்குநர் மிஷ்கின்! ரூமுக்குள் வைத்து மிரட்டிய 20 ரவுடிகள்..
மன்னிப்பு கேட்ட மிஷ்கின்
கடந்த வாரம் பாட்டில் ராதா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஸ்கின் கெட்ட வார்த்தைகள் பேசியது, பெரும் சர்ச்சையாக மாறியது. பலரும் இதனை கண்டித்து பேசினார். இதனால் இன்று நடைபெற்ற பேட் கேர்ள் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் மிஸ்கின், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
இதுமட்டுமின்றி மற்றொரு அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தையும் அங்கு அவர் பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறியதாவது :
'நான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் எனும் படத்தை பண்ணேன், அப்படத்தை முதல் நாள் ரிலீசாக விடவில்லை. மறுநாள் இரவுதான் அப்படம் ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸாகி 10 நாட்களுக்கு பின், அப்படத்தின் டிவி (சாட்டிலைட்) உரிமையை வாங்க வந்தார்கள். அப்போது எனக்கு நெருக்கமான ஒரு மனிதர், என்னை அழைத்துக்கொண்டு போய் நிறைய காசு வாங்கி தருகிறேன் என கூறினார்.
ஒரு பெரிய ரூமுக்குள்ள போனேன், அந்த ரூமுக்குள்ள 20 பேர் இருந்தாங்க. 75 லட்ச ரூபாய்க்கு அந்த படத்தின் டிவி உரிமையை குடு என கேட்டார்கள். நான் சொன்னேன், ஐயா நான் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருக்கேன். இது ரொம்ப நல்ல படம். 2 கோடி கொடுங்க என கேட்டேன். கொடுக்க முடியாது என கூறினார்கள்.
அப்போதுதான் எனக்கு புரிந்தது, 20 தடியர்கள் வைத்து என்னை மிரட்டி, ரூ. 75 லட்சத்திற்கு கையெழுத்து போட வைத்தார்கள். அந்த திரைப்படங்கள் அந்த தொலைக்காட்சியில் 80 வாட்டி ஒளிபரப்பு ஆகியிருக்கு. அவங்க கொடுத்த செக் எடுத்துட்டு வந்து, அவங்க முன்னாடியே கிளிச்சு போட்டேன்.
அப்போது அவர்களிடம் சொன்னேன், நான் சென்னைக்கு வரும்போது ஒரு வெள்ளை பேப்பர் மற்றும் ஒரு பென்சில் தான் எடுத்துவந்தேன். அவ்வளவு வறுமையான குடும்பத்தில் இருந்துதான் வந்தேன். நான் கஷ்ட்டப்பட்டு மீண்டு வருவேன் என கூறினேன். அப்படிதான் இன்று இந்த மேடையில் கஷ்ட்டப்பட்டு மீண்டு வந்து நின்றுகொண்டு இருக்கிறேன்.
எனக்கு துரோகம் செய்த மனிதன் ஒரு பெரிய இயக்குநர், இன்னும் இருக்கான். எப்படி சக மனிதனை பார்த்து மோசமாக பேசமுடியும். எனக்கு பேச வேண்டிய கட்டாயமா? நான் ஒரு படத்தின் மேடைக்கு வந்தால், அப்படத்தை கூவி விற்க வேண்டும். ஏன் நான் கொட்டுக்காளி படத்திற்கு நிர்வாணமாக நிற்கிறேன் என சொன்னேன். அப்படியாவது அப்படம் கவனத்தை ஈர்த்துவிடாது என்பதற்காக தான்.
எனக்கு நேரமே இல்லை. 40 வருடங்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள் இருக்கிறது. அவ்வளவு மனிதர்களை நான் சந்திக்க வேண்டியது இருக்கிறது. அவ்வளவு நாடுகளுக்கு நான் செல்ல வேண்டியது இருக்கிறது. மன்னிப்பு கேட்பதற்கு நான் என்றும் தயங்க மாட்டேன் ஐயா. உதிரிப்பூக்கள் படத்தில் ஒரு காட்சி வரும், கடைசி காட்சி அது.
அந்த மோசமான கதாபாத்திரத்தை 'சாவுடா' என மக்கள் கூறுவார்கள், அப்போது அந்த ஊர் மக்களை பார்த்து அந்த மோசமான கதாபாத்திரம் கடைசியில் சொல்லுவான், 'எனக்கு ரொம்ப வருத்தம், இவ்வளவு நாள் நான் கெட்டவனா இருந்தேன். இப்போ உங்க எல்லாரையும் நான் கெட்டவனா ஆக்கிட்டேன். அது எனக்கு வருத்தமா இருக்கு'.
நண்பர்களே நான் உங்கள் முன்னாள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு, உங்கள் அனைவரையும் கடவுள் ஆக்குகிறேன். நன்றி" என இவ்வாறு இயக்குநர் மிஸ்கின் பேசினார்.