Eko திரை விமர்சனம்
சந்தீப் பிரதீப், வினீத், நரேன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள Eko மலையாள திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
காட்டுக்குன்னு என்ற மலையின் மேல் தனியான வீட்டில் வசிக்கிறார் மலாத்தி சேத்தாத்தி என்கிற வயதான பெண். அவரைப் பார்த்துக்கொள்ள பீயூஸ் (சந்தீப் பிரதீப்) என்ற இளைஞர் அங்கேயே தங்கியிருக்கிறார்.
மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி வந்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதுடன், மலாத்தியின் மகன் அனுப்பும் பணத்தை வாங்கிக் கொள்கிறார். இந்த சூழலில் மோகன் போத்தன் (வினீத்) ஒரு வேலையாக அந்தப் பகுதிக்கு வந்து தனியாக, காட்டுப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்குகிறார்.

மூன்று மாதங்களுக்கு பின் அவர் கொல்லப்படுகிறார். ஆனால் உடல் கிடைக்கவில்லை. சில மாதங்கள் கழித்து நரேன் இதுகுறித்து விசாரிக்க அங்கு வருகிறார். அவர் பீயூஸ் உட்பட சிலரிடம் விசாரிக்கிறார்.
ஆனால் அவர் வந்ததன் நோக்கம் குரியாச்சன் குறித்து தெரிந்துகொள்ளதான். குரியேச்சன் அந்த பகுதியில் மறைந்து வாழ்வதாக பலரும் நம்புகிறார்கள். நிறைய பேர் அவரைத் தேடுகிறார்கள். மலாத்தியை தனியாக குடி வைத்ததே அவர்தான்.

அவருக்கும் மலாத்திக்கும் என்ன சம்பந்தம்? ஏன் பலரும் அவரைத் தேடுகிறார்கள்? மோகன் போத்தனை கொன்றது யார் என்ற பல கேள்விகளுக்கு விடையே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
கிஷ்கிந்தா காண்டம் படத்தை இயக்கிய தின்ஜித் அய்யதன் இப்படத்தையும் உருவாக்கியுள்ளார். அரிதான நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து அவற்றை விற்கும் நபராக இருப்பவர் சவுரப் சச்தேவா (குரியேச்சன்).
அவரது நண்பராக வரும் வினீத் இருவரும் சேர்ந்து மலேசியாவிற்கு அரிதான ஒரு நாய் இனத்தை தேடிச் செல்கின்றனர். அங்கு நடக்கும் காட்சிகள் மிரட்டல். நாய்களை ஒவ்வொருமுறையும் க்ளோசப்பில் காட்டும்போது நாம் பயப்படாமல் இருக்க முடியாது.

அந்த அளவிற்கு நாய்களின் ஆக்ரோஷத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். முதல் பாதியில் சந்தீப்பிற்கு பெரிய வேலையில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் அவர் கதையை தாங்கி செல்லும் அளவிற்கு அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.
அமைதியான இளைஞராக அறிமுகமாகி ஆக்ரோஷம் காட்டும் இடங்களில் சந்தீப் நடிப்பில் மிரட்டுகிறார். வினீத்திற்கு நல்ல நெகட்டிவ் ரோல். அவரை விட ஒரு படி மேலே ஸ்கோர் செய்கிறார் சவுரப். ஸ்லோபர்ன் திரில்லர் கதையாக படம் நகர்வதால் நிறைய காட்சிகள் வசனங்களிலேயே கடத்தப்படுகிறது.

ஆனால் அவற்றை உன்னிப்பாக கவனித்து பார்க்க வேண்டும். பாதுகாப்பிற்கும், கட்டுப்பாட்டிற்கும் உள்ள ஒற்றுமை என்று சவுரப் கூறும் ஒரு வசனம் கிளைமேக்சில் லிங்க் ஆவது மிரட்டல். என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? என்ற கேள்விகளை முதல்பாதியில் கொடுத்து, இரண்டாம் பாதியில் முடிச்சுகளை அவிழ்க்கும்போது பிரம்மிப்பாக உள்ளது.
மலாத்தி கதாபாத்திரத்தில் பியானா மொமின் யதார்த்தை நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். கிளைமேக்சில் சந்தீப் சண்டையிடும் காட்சி பரபரப்பின் உச்சம். இறுதிவரை சில சஸ்பென்ஸ்களை மெய்ன்டெய்ன்ட் செய்ததில் ஜெயிக்கிறார் இயக்குநர் தின்ஜித். ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. பின்னணி இசை பல இடங்களில் மிரட்டுகிறது.

க்ளாப்ஸ்
நடிகர்களின் எதார்த்த நடிப்பு
திரைக்கதை
ட்விஸ்ட்கள்
வசனங்கள்
நாய்களை காட்டிய விதம்
பல்ப்ஸ்
குரியேச்சனை ஏன் எல்லாரும் தேடுகிறார்கள் என்பதை நன்றாக விளக்கியிருக்கலாம்.
மொத்தத்தில் இந்த Eko மிஸ்டரி த்ரில்லர் ரசிகர்களுக்கு செம ட்ரீட். கண்டிப்பாக திரையரங்கில் கண்டு ரசிக்கலாம்.
