Good Fortune: திரை விமர்சனம்
ஜான் விக் நாயகன் கீனு ரீவ்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள Good Fortune என்ற சூப்பர்நேச்சுரல் காமெடி ஹாலிவுட் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம் வாங்க.
கதைக்களம்
ஆர்ஜ் (அஸிஸ் அன்சாரி) அமெரிக்காவில் ஹார்ட்வேர் ஹெவன் என்ற நிறுவனத்தில் சிறிய ஊதியத்திற்கு வேலை பார்த்து வருகிறார். அத்துடன் உணவு டெலிவரி வேலையும் பார்ட் டைம் ஆக பார்த்து வருகிறார்.
சொந்த வீடு இல்லாமல் காரில் தூங்கும் வாழ்க்கையை வாழும் அவர், ஒருநாள் ஜெப் என்ற பணக்கார நபருக்கு டெலிவரி செய்யும்போது நட்பாகிறார். அவரது வீட்டில் தங்கி வேலைகளை பார்க்க வாய்ப்பை பெறுகிறார்.
ஜெப் தனது கிரெடிட் கார்டை கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுகிறார். தான் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணுடன் ஓட்டலில் சாப்பிட்ட பின், ஜெப்பின் கார்டை பயன்படுத்தி ஆர்ஜ் பில் காட்டுகிறார்.
இது தெரிந்ததும் கோபப்படும் ஜெப் உடனடியாக ஆர்ஜை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார். தற்போது டெலிவரி வேலையும் பறிபோக நிர்கதியாய் ரோட்டில் நிற்கிறார் ஆர்ஜ். அவரின் வாழ்க்கைப் பார்த்து வரும் ஏஞ்சல் கேப்ரியல் அவர் முன்தோன்றி வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறார்.
அதன் விளைவாக ஜெப் ஏழையாக, ஆர்ஜ் பணக்காரர் ஆக, ஏஞ்சல் ஆக இருந்த கேப்ரியல் தனது சக்திகளை இழந்தது சாதாரண மனிதராகிறார். அதன் பின்னர் என்ன ஆனது? இவர்களின் வாழ்க்கை மாறியதா? என்பதே காமெடி கலந்த படத்தின் மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
ஜிம் கேரியின் புரூஸ் அல்மியிட்டி, தமிழில் வெளியான அறை எண் 305யில் கடவுள் போன்ற படங்களின் பாணியில் இப்படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார் தமிழ் பூர்வீகக் குடி நபரான அஸிஸ் அன்சாரி.
அப்பாவியான நபராக அறிமுகமாவும் அவர், பணக்கார வாழ்க்கை கிடைத்தவுடன் செய்யும் சேட்டைகள் எல்லாம் சிரிப்பு வெடி. நிம்மதியாக தூங்க முடியாமல் தவிப்பது, வாழ்க்கைக்கான போராட்டம், விரக்தி என பல உணர்வுகளை காட்சிக்கு கட்சி அழகாக இயக்குநராகவும், நடிகராகவும் கடத்துகிறார் அஸிஸ்.
பணக்கார நபரான ஜெப்பின் (சேத் ரோகன்) வாழ்க்கையை பார்க்கும்போது நமக்கே பொறாமை ஏற்படும். அந்த அளவிற்கு ஆடம்பர வாழ்க்கையை வாழும் அவர், எல்லாத்தையும் இழந்து டெலிவரி பாய் ஆகும்போது கொடுக்கும் ரியாக்ஷன் அபாரம். ஒன்லைன் பஞ்ச் காமெடியில் படம் முழுக்க நம்மை சிரிக்க வைக்கிறார்.
கிளைமேக்சில் AI, ரோபோ பயன்பாடுகளுக்கு எதிராக அவர் பேசும் இடம் சிறப்பு. ஜான் விக்காக நாம் பார்த்த கீனு ரீவ்ஸ், ஏஞ்சல் கேப்ரியல் ஆக நடிப்பில் அசத்தியிருக்கிறார். அஸிஸின் வாழ்க்கையை மாற்ற சீனியர் ஏஞ்சலிடம் அனுமதி கேட்பது, மனித வாழ்க்கைக்கு வந்த பின் பர்கரை சாப்பிட்டு பரவசப்படுவது என வெறியேஷனையும் காட்டுகிறார்.
குறிப்பாக ஜெப் வேதனையுடன் ஒரு விஷயத்தை கூறும்போது, கீனு ரீவ்ஸ் கூலாக சிகரெட்டை பிடிக்கும் காட்சி செம மாஸாக நமக்கு தோன்றுகிறது. நமது வாழ்க்கையில் ஏற்படும் சில கசப்பான விஷயங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், பிறரின் உடைமைகளுக்கு ஆசைப்படக்கூடாது போன்ற கருத்துக்களை போதனையாக கூறாமல் காட்சிகளின் ஊடே கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் அஸிஸ்.
கார்ட்டர் பர்வெலின் பின்னணி இசை மிகச்சிறப்பு. ஆடம் நியூபோர்ட்-பெர்ராவின் கேமரா ஒர்க் பிரமாதமாக உள்ளது. கதை, நடிப்பு, இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பாளர் என ஆல்ரவுண்டராக கலக்கியிருக்கிறார் அஸிஸ் அன்சாரி.
க்ளாப்ஸ்
கதை
திரைக்கதை
கீனு ரீவ்ஸ், அஸிஸ் மற்றும் சேத் ரோகனின் நடிப்பு
காமெடி வசனங்கள்
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த Good Fortune மனதிற்கு நிறைவான படமாக கவர்கிறது. கண்டிப்பாக திரையரங்கில் கண்டு ரசிக்கலாம்.