ஹிட் லிஸ்ட்: திரை விமர்சனம்
கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சரத்குமார், விஜய் கனிஷ்கா நடிப்பில் வெளியாகியுள்ள 'ஹிட் லிஸ்ட்' திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
வள்ளலாரை பின்பற்றி எந்த உயிருக்கு தீங்கு ஏற்படக்கூடாது என்று வாழ்ந்து வருபவர் படத்தின் நாயகன் விஜய் கனிஷ்கா. அம்மா, தங்கையுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் விஜய் கனிஷ்கா, நிகழ்ச்சி ஒன்றில் ACP அதிகாரியான சரத் குமாருடன் அறிமுகமாகிறார்.
அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் விஜய் கனிஷ்காவுக்கு போன் செய்யும் மர்ம நபர், அவரின் அம்மா, தங்கையை கடத்தி வைத்திருப்பதாக கூறி மிரட்டுகிறார்.
உடனே சரத் குமாரிடம் அதனை விஜய் கனிஷ்கா கூற, பின்னர் எப்படி அவர் தனது குடும்பத்தை காப்பாற்றினார்? கடத்தப்பட்டதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
சூர்யா கதிர், கே.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இப்படத்தை, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார். இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இப்படத்தின் மூலம் ஹுரோவாக அறிமுகமாகியிருக்கிறார்.
Saw ஹாலிவுட் படங்களின் சாயலில் விறுவிறுப்பான திரைக்கதையாக ஹிட் லிஸ்ட் நம்மை ஈர்க்கிறது. முதல் 10 நிமிடங்களில் ஆரம்பிக்கும் கதை இறுதிவரை பரபரப்பாகவே நகர்கிறது. மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வரும் சரத் குமார், சண்டைக்காட்சி ஒன்றில் அதகளம் செய்திருக்கிறார்.
ஹீரோ விஜய் கனிஷ்கா அப்பாவி இளைஞர் வேடத்திற்கு சரியாக பொருந்துகிறார். ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் நம்ப வைக்க முயற்சித்திருக்கிறார். காதல் காட்சிகள், தேவையில்லாத பாடல்கள் மற்றும் நகைச்சுவை என்றில்லாமல் முழுக்க முழுக்க கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள்.
திரில்லர் படங்களுக்கே உரித்தான காட்சிகள், ட்விஸ்ட், ஏற்றுக்கொள்ளும்படியான பிளாஷ்பேக் என அனைத்து பார்வையாளர்களை கவரும் ரகம்.
கௌதம் மேனன், ஸ்மிரிதி வெங்கட், சித்தாரா, முனீஷ்காந்த் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்கள். கொரோனா லாக்டவுன் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஷ்பேக் காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.
க்ளாப்ஸ்
பரபரப்பான திரைக்கதை
உணர்ச்சிகரமான பிளாஷ்பேக்
கிளைமேக்ஸ் ட்விஸ்ட்
பல்ப்ஸ்
பின்னணி இசை
சில இடங்களில் லாஜிக் மீறல்கள்