K-Ramp: திரை விமர்சனம்
கிரண் அப்பாவரம் நடிப்பில் வெளியாகியுள்ள கே-ரேம்ப் தெலுங்கு திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே பார்ப்போம்.
கதைக்களம்
ஐதராபாத்தைச் சேர்ந்த குமார் அப்பாவரம் (கிரண்) கேரளாவின் கொச்சினில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். அதே கல்லூரியில் தனது வகுப்பில் படிக்கும் சக மாணவி மெர்சியை (யுக்தி தரேஜா) முதல் சந்திப்பிலேயே காதலிக்க தொடங்குகிறார் குமார்.
ஆனால் மெர்சிக்கு குமார் மீது ஈர்ப்பு இருந்தாலும், தனக்கு இருக்கும் டிசார்டர் பிரச்சனையால் குமாரின் காதலை ஏற்க மறுக்கிறார். இதுபற்றி தெரியாத குமார் மெர்சியை விரட்டி விரட்டி காதலிப்பதுடன் கடைசி வரை உன் கூடவே இருப்பேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார்.
ஒருநாள் மெர்சியிடம் தப்பாக நடந்து கொண்ட கல்லூரி மாணவர்களை அடித்து உதைக்கிறார் குமார். தனக்காக அடி வாங்கி பின் சண்டை போடும் குமாரைப் பார்த்து மெர்சியும் காதலிக்க தொடங்குகிறார்.
அதன் பின்னர் திருமணம் குறித்த பேச்சு எழ, குமாரின் அப்பா சாய்குமார் மெர்சி குடும்பத்திடம் பேசி சம்மதம் வாங்குகிறார். அப்போது மெர்சியின் பிரச்சனையை அவரது தந்தை கூற முற்படும்போது அது தெரிந்ததுபோலவே சாய்குமாரும், நரேஷும் பேசுகின்றனர்.
இந்த நிலையில், குமாரினால் ICUயில் அனுமதிக்கப்படும் அளவிற்கு மெர்சி செல்கிறார். அப்போதுதான் அவருக்கு இருக்கும் பிரச்சனையே குமாருக்கு தெரிய வருகிறது. அதன் பின்னர் அதிர்ச்சியடையும் குமார் தனது காதலை தொடர்ந்தாரா? மெர்சிக்கு இருக்கும் பிரச்சனை சரியானதா? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
ஐதராபாத்தில் நடக்கும் கதையாக பிரேமலு படம் ஹிட்டான நிலையில், கேரளாவில் நடக்கும் கதையைப் போல் ஜெய்ன்ஸ் நானி இப்படத்தை இயக்கியுள்ளார். இளைஞர்களை குறிவைத்து ஜாலியான காமெடி, ரோமன்ஸ் படமாக கொடுத்துள்ளார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் நிரூபணம் ஆகியுள்ளது.
ஹீரோயின் யுக்தி தரேஜாவுக்கு இருக்கும் பிரச்சனையை அறிந்த பின், நான் எதுக்கு இந்த பொண்ண கட்டிக்கிட்டு கஷ்டப்படணும் என்று தப்பிக்க நினைக்கும் ஹீரோ கிரணின் மனநிலை, இன்றைய தலைமுறையை பிரதிபலிப்பது போல் உள்ளது.
ஆனாலும் உண்மையான காதலை உணர்ந்து அவர் காதலியை சரிசெய்ய படும்பாடு அதகளம். தனியாக சமாளிக்க முடியாமல் கிரண் அவதிப்படும் சூழலில் என்ட்ரியாகும் வெண்ணிலா கிஷோர், தனது பங்குக்கு கொளுத்திப்போடும் பார் சீன் அல்ட்டிமேட் காமெடி. மாமாவாக நடித்துள்ள நரேஷின் கெட்அப்பும், அவருக்கான பிளாஷ்பேக்கும் வேற லெவல் காமெடி.
10 நிமிடம் காத்திருக்க வேண்டும் என்ற காட்சியில் அவர் ஆடும் நடனம் திரையரங்கில் சிரிப்பலை. முதல் காதல், ஆக்ஷன் என்று ஜாலியாக நகர, இரண்டாம் பாதியில் காமெடியும் எமோஷனலும் கலந்துக்கொள்கிறது. ஆனாலும் தொய்வில்லாத திரைக்கதையால் பரபரவென கிளைமேக்ஸ் வந்துவிடுகிறது.
தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான கிரண் அப்பாவரம் இப்படத்தில் கல்லூரி மாணவராக துடிப்புடன் நடித்துள்ளார். நடனம், சண்டை, ரோமான்ஸ், காமெடி என கலக்கி முழுப்படத்தை தனது தோளில் தங்கியுள்ளார்.
குறிப்பாக டைம் காமெடியில் அட்டகாசம் செய்துள்ளார். சாய்குமார் கலகலப்பாக அறிமுகமாகி கடைசியில் எமோஷனல் டச் கொடுக்கிறார். முரளிதர் கௌட் காமெடியில் சரவெடியாக கொளுத்தி போடுகிறார்.
முத்தக் காட்சிகள் அதிகம் உள்ளதால், கண்டிப்பாக இது வயது வந்தோருக்கான படம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பாடல்களைத் தாண்டி பின்னணி இசையில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார் இசையமைப்பாளர் சைதன் பரத்வாஜ்.
க்ளாப்ஸ்
திரைக்கதை
காமெடி காட்சிகள்
கிளைமேக்ஸில் வரும் சென்டிமென்ட் வசனங்கள்
பல்ப்ஸ்
சில லாஜிக் மீறல்கள்