குருதி ஆட்டம் திரைவிமர்சனம்
இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி ஷங்கர், கண்ணா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் குருதி ஆட்டம். Rock Fort Entertainment தயாரித்துள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது. 8 தோட்டாகள் திரைப்படத்திற்கு பின் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா, இல்லையா என்பதை? இந்த விமர்சனத்தில் காணலாம்.
கதைக்களம்
மதுரையை சேர்ந்த சக்தி என்ற கதாபாத்திரத்தில் துள்ளலான இளைஞராக வலம் வருகிறார் அதர்வா. 10ஆம் வகுப்பு Attempt Exam எழுதி வரும் அவர் அங்கு ஆசிரியராக வரும் படத்தின் கதாநாயகி வெண்ணிலாவை பார்த்து பின் காதலில் விழுகிறார். கபடி விளையாட்டு வீரரான அதர்வா, அவரின் கபடி அணியை வெல்ல மற்றுமொரு எதிரணி பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. அந்த அணியை சேர்ந்த கண்ணா ரவி மதுரையின் பெரிய தலையாக இருக்கும் அக்கா என்று அழைக்கப்படும் ராதிகாவின் மகன். ஒரு நாள் போட்டியில் சண்டை நடக்க அதுவே பெரிய சம்பவத்திற்கு காரணமாக அமைக்கிறது. இதனால் அதர்வா கைதாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
இதனால் அதர்வாவுக்கு உதவி செய்து நெருங்கிய நண்பராகிறார் கண்ணா ரவி, இது பிடிக்காமல் அவருக்கே துரோகம் செய்ய நினைக்கிறார் கண்ணா ரவியின் கூட்டாளி. இது ஒருபுறம் இருக்க அதர்வா பணிபுரிந்து வரும் மருத்துவமனையில் வைரல் காய்ச்சல் காரணமாக கண்மனி என்ற குழந்தை அனுமதிக்கப்படுகிறது. அப்போதில் இருந்தே அந்த குழந்தையிடம் தனி அன்பு காட்டி நெருக்கமாகிறார் அதர்வா. பின்னர் துரோகம் செய்ய நினைக்கும் அறிவு அதர்வா மற்றும் கண்ணா ரவி இருவரையும் கொலை செய்ய கூலிப்படையை ஏவி விடுகிறார். இதனால் அதர்வா கண் முன்னே கொலை செய்யப்பட்டுகிறார் கண்ணா ரவி.
தன் மகனை கொலை செய்தவர்களை ராதிகா பழிவாங்கினாரா? குழந்தை கண்மணியை காப்பற்ற நினைக்கும் அதர்வாவிற்கு என்ன ஆனது என்பதே குருதி ஆட்டம் படத்தின் இரண்டாம் பாதி.
படத்தை பற்றிய அலசல்
கபடி விளையாட்டு வீரராக மதுரை சேர்ந்த இளைஞராக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அதர்வா, படமுழுக்க சண்டை காட்சிகள் என்பதால் அனைத்திலுல் தனது சிறப்பான பங்கை செய்துள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் கண்ணா ரவி மற்றும் வட்சன் இருவரும் தங்களின் கதாபாத்திரங்களை நினைவில் கொள்ளும் படியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். பிரியா பவானி ஷங்கருக்கு படத்தில் அவ்வளவு ஆழமான கதாபாத்திரம் கிடையாது. ராதிகா மற்றும் ராதா ரவியின் கதாபாத்திரங்கள் ஓரளவு நன்றாக இருந்தது. மற்றபடி படத்தில் பல கதாபாத்திரங்கள் என்பதால் இதுவே படத்திற்கு ஒட்டவே இல்லை.
8 தோட்டாக்கள் திரைப்படத்திற்கு பின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்த குருதி ஆட்டம் திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். திரைக்கதையில் பயங்கரமாக சொதப்பியிருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட வெட்டு குத்து காட்சிகளால் நிரம்பியுள்ளன, கதை என்று எதுவும் பெரிதாக இல்லை. பார்வையாளர்களை கடுப்பேற்றும் வகையில் படத்தின் படத்தொகுப்பு அமைந்துள்ளது, அதுவே படத்தின் பெரிய குறையாகவும் இருக்கிறது.
யுவனின் பின்னணி மற்றுமொரு சொதப்பல், ஆங்காங்கே பின்னணி இசை தினிக்கப்பட்டு இருப்பதால் சலிப்பு தட்டுகிறது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சில ரசிக்கும் படி இருக்கின்றன, ஆனால் அது எதுவும் படத்தின் விறுவிறுப்பை கூட்டவில்லை. முதல் பாதியில் படத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச விறுவிறுப்பு கூட இரண்டாம் பாதியில் சுத்தமாக இல்லை.
க்ளாப்ஸ்
துணை கதாபாத்திரங்கள் - கண்ணா ரவி, வட்சன்
ஆக்ஷன் காட்சிகள்
பல்ப்ஸ்
ஸ்ரீ கணேஷின் திரைக்கதை
படத்தொகுப்பு
பின்னணி இசை
மொத்தத்தில் குருதி ஆட்டம் திரைப்படம் சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களின் வரிசையில் மற்றுமொரு சொதப்பல்.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு இது தான் காரணம்.