மாலிக்: திரை விமர்சனம்
ராஜ்குமார் ராவ், மனுஷி சில்லர் நடிப்பில் வெளியாகியுள்ள 'மாலிக்' இந்தி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.
கதைக்களம்
80களின் இறுதியில் அலகாபாத்தில் ஒரு கிராமத்தில் வாழும் விவசாயியின் மகன் தீபக் (ராஜ்குமார் ராவ்). அமைச்சர் ஷங்கர் சிங்கின் மேடைப்பேச்சை கேட்டு அவரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்கிறார்.
இந்த சூழலில் ஷங்கர் சிங்கின் ஆளான லங்தா, தீபக்கின் தந்தை ராஜேந்திர குப்தாவின் பயிர்களை உழுது நாசப்படுகிறார். அதை தடுக்கும் முயற்சியில் சாதாரண விவசாயியான ராஜேந்திர குப்தாவின் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சிக்கிறார் லங்தா.
லங்தா அமைச்சருக்காக வேலைபார்க்கிறார் என்பதை அறியும் தீபக், ஆவேசமாக அவரிடம் சென்று நியாயம் கேட்கிறார். ஆனால் அமைச்சரோ (சௌரப் சுக்லா) அவரிடம் 'முடிந்தால் அவனை கொன்னுட்டு வந்து என்கிட்ட பேசு' என சவால் விட, வெகுண்டெழுந்து செல்கிறார் தீபக். அன்று இரவே கொடூரமாக பொதுவெளியில் லங்தாவை அடித்துக்கொள்கிறார் தீபக்.
அன்றிலிருந்து தனது பெயரை 'மாலிக்' என்ற பட்டமாக சூட்டிக்கொண்டு, நில உரிமையாளர்களை எதிர்க்கும் தலைவனாக மாற தீபக் களமிறங்குகிறார். அதன் பின்னர் அவரது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? அதிகார வர்க்கத்தை அவர் எப்படி ஆட்டிப்படைத்தார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
சாதாரண ஏழை விவசாயியின் மகன் வர்க்க போராட்டத்தில் இறங்கி பெரும்புள்ளியாக மாறும் வழக்கமான டெம்ப்லேட் கதைதான். சமீப காலமாக காமெடி கதாபாத்திரங்களிலேயே அதிகம் நடித்து வந்த ராஜ்குமார் ராவ், இம்முறை ஆக்ஷன் களத்தில் அதகளம் செய்திருக்கிறார்.
மொத்த படத்தையும் தனது நடிப்பினால் தோளில் தங்குகிறார் அவர். அரசியல்வாதி, அடியாள், போலீஸ் மற்றும் அவர்களை எதிர்த்து நிற்கும் ஹீரோ என பல படங்களில் பார்த்த காட்சிகள்தான். என்றாலும் முடிந்தவரை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் புல்கித்.
ராஜ்குமார் ராவ் தீபக் ஆக இருந்து மாலிக்காக மாறும்போது அப்படியொரு வெரியேஷனை காட்டியிருக்கிறார். அவரது மனைவியாக மனுஷி சில்லர் தனது பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
அதேபோல் சௌரப் சுக்லா, ப்ரொசெஞ்சித் சாட்டர்ஜி, சௌரப் சச்தேவா, அன்ஷுமான் புஷ்கர் மற்றும் ஸ்வானந்த் கிர்கிரே ஆகியோரும் அபார நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அனிமல் படத்தில் வில்லனின் சகோதரனாக மிரட்டிய சௌரப் சச்தேவா அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ராஜ்குமாரும் அவரும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி மிரட்டல். எஸ்.பி ஆக வரும் ப்ரொசெஞ்சித் சாட்டர்ஜி அவருக்கு போட்டியாக வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். பார்த்துப் பழகிய கதை என்பதால் அடுத்தடுத்த காட்சிகளை எளிதில் யூகிக்க முடிகிறது.
இதனாலேயே காட்சிகள் மெதுவாக நகர்வதுபோல் ஃபீல் ஆகிறது. அதனை தெரியாதபடி பார்த்துக்கொள்ள ஏகப்பட்ட துப்பாக்கிச்சூடு காட்சிகளை வைத்திருக்கிறார் போல இயக்குநர்.
க்ளாப்ஸ்
ராஜ்குமார் ராவ்வின் நடிப்பு
ஆக்ஷன் காட்சிகள்
ட்விஸ்ட்
பல்ப்ஸ்
சுவாரஸ்யம் குறைவான திரைக்கதை