மாஸ் ஜாதரா: திரை விமர்சனம்
தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் ரவி தேஜாவின் 75வது படமாக வெளியாகியுள்ள மாஸ் ஜாதரா அவருக்கு கைகொடுத்ததா என்று பார்ப்போமா.

கதைக்களம்
வாரங்கலில் ரயில்வே போலீசாக வேலை பார்க்கும் லக்ஷ்மண் பேரி (ரவி தேஜா) ஒரு கொலை கேஸில் அரசியல்வாதியை எதிர்த்து போலீஸ் எஸ்.ஐ முரளி ஷர்மாவை அதிர வைக்கிறார்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான தனது தாத்தாவினால் (ராஜேந்திர பிரசாத்) லக்ஷ்மணின் திருமண வரன் தடைபடுகிறது. இந்த சூழலில் தாத்தாவை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கும் லக்ஷ்மண், ட்ரான்ஸ்பரில் அடிவவாரம் என்ற ஊருக்கு செல்கிறார்.

அங்கு செல்வாக்கு மிக்க ஷிவுடு (நவீன் சந்திரா) விவசாயிகளை வைத்து ஷீலாவாணி என்ற அரியவகை கஞ்சாவை விளைவித்து, இந்தியா முழுவதும் சப்ளை செய்கிறார். அதற்கு உதவியாக பாரெஸ்ட் அதிகாரி, சப் இன்ஸ்பெக்ட்டர் ஆகியோரை தனக்கு கைக்குள் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் ஊருக்கு வரும் லக்ஷமண் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்கிறார். ஆனால் ரயில்வே போலீஸ் என்பதால் அவரால் எந்த ஆக்ஷனும் எடுக்க முடியவில்லை. என்றாலும் தனது ஸ்டேஷனுக்குள் வில்லனின் ஆட்கள் அட்டகாசம் செய்தால் தோலை உரிக்கிறார்.

ஷிவுடு மிகப்பெரிய கஞ்சா சப்ளையை கொல்கத்தாவிற்கு கடத்தப்பார்க்க, அது ரயிலில் கொண்டுசெல்லப்படுவதை அறியும் லக்ஷ்மண் தனது ஸ்டேஷனில் நிறுத்தி சீஸ் செய்கிறார். அதன் பின் ஒரு லாரி அளவிலான கஞ்சாவை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் அவர் ஷிவுடுவை ஆட்டி வைக்கிறார், இறுதியில் ஊர் மக்களை அவர் மீட்டாரா என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
பானு போகவரபு என்கிற புதுமுக இயக்குநருக்கு தனது 75வது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் ரவி தேஜா. தனது முந்தைய படங்களில் இருந்த ஓவர்டோஸ், கிரிஞ்ச் காட்சிகளை எல்லாம் முடிந்தவரை குறைத்து பழைய ரவி தேஜா இப்படத்தில் தெரிகிறார்.
உதாரணமாக, அவருக்கு மாஸ் ஓபனிங் சண்டை இருந்தாலும் பாடல் ஓப்பனிங் பாடல் இல்லை. வில்லனின் ஆட்கள் பலர் அவரை கேலி செய்யும்போது அமைதியாக இருக்கிறார். இதுபோன்று எல்லாம் நாம் ரவி தேஜாவை பார்த்திருக்க மாட்டோம். முடிந்த அளவிற்கு தனது மாஸ் பாணியில் இருந்து சற்று விலகி நடித்துள்ளார்.

ஆனால் படத்திற்கு அதெல்லாம் கைகொடுத்ததா என்றால் சந்தேகமே. அதே சமயம் அவருக்கான ரசிகர்களை கொண்டாட வைக்கும் காட்சிகளும் படத்தில் நிறைய உள்ளன. ஸ்ரீலீலாவின் சேஞ்ச் ஓவர் காமெடியாக இருந்தாலும் அவரது கேரக்டர் ரொம்ப ஓவர். பிற்பாதியில் அவர் சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
டான்ஸ், ரொமான்ஸ் என தனது பங்கை கச்சிதமாக செய்துள்ளார். ஷிவுடுவாக நவீன் சந்திரா தோற்றத்திலேயே மிரட்டினாலும், புஷ்பா அல்லு அர்ஜுனை ரொம்பவே பிரதிபலிக்கிறார். எனினும் நல்ல வில்லத்தனத்தை காட்டியுள்ளார். காமெடிக்கு ராஜேந்திர பிரசாத் மற்றும் வில்லனின் ஆட்கள் செய்வதெல்லாம் செம ரகளை.

குறிப்பாக படத்தின் எண்டிங்கில் கூலி படத்தைப் பார்த்து கூலியான அஜய் கோஷின் சீன் செம காமெடி. முதல் பாதி காமெடி ஆக்ஷன் என பரபரப்பாக செல்கிறது. இடைவேளைக்கு முன் வரும் சண்டைக்காட்சியும், பாலத்தின் மீது வரும் சண்டைக்காட்சியும் மிரட்டல். சமுத்திரக்கனியை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.
இரண்டாம்பாதியில் கஞ்சாவை வைத்துக் கொண்டு ரவி தேஜா ஆட்டம் காட்டினாலும், இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கலாம். மாஸ் காட்சிகளை வைத்தே நகர்த்தி இருக்கிறார். விக்ரமர்குடுவின் (கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை) இரண்டாம் பாகமாக இது என்று கேட்கும் அளவிற்கு பல இடங்களில் அப்படத்தை நியாபகப்படுத்துகிறது.

பீம்ஸ் சிசிரோலியோவின் பாடல்கள் ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு வலுசேர்க்கிறது. ஸ்ரீலீலாவின் கிளாமர் நடனம் இப்படத்திலும் அவரது ரசிகர்களுக்கு குஷிதான்.
க்ளாப்ஸ்
ரவி தேஜா
கமர்ஷியல் திரைக்கதை
சண்டைக்காட்சிகள்
பல்ப்ஸ்
இரண்டாம் பாதியில் வரும் யூகிக்கக்கூடிய காட்சிகள்
மொத்தத்தில் சண்டைக்காட்சிகளில் மட்டுமே மாஸ் காட்டியுள்ளது இந்த மாஸ் ஜாதரா. ஆக்ஷன் விரும்பிகள் பார்க்கலாம்.
