மார்டர் லவ் சென்னை ஒரு பார்வை
மார்டர் லவ் சென்னை ஒரு பார்வை காதல் என்ற ஒற்றை சொல்லால் பல திரைப்படங்கள் உருவாகி வந்துள்ளது, சினிமாவில் தவிர்க்கவே முடியாத சொல் காதல், அந்த காதலை மையமாக வைத்து வந்துள்ள தொடர் தான் மார்டன் லவ் சென்னை.
ராஜு முருகனின் காதல்
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் முதல் எபிசோடாக வந்துள்ளது Lalagunda பொம்மைகள். வட சென்னையில் பிஸ்கட் விற்கும் ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண், ஆரம்பத்திலேயே தன் கருவை கலைக்கிறாள், இனி காதலே வேண்டாம் என இருக்க, ஒரு வட இந்திய இளைஞன் மீது காதலில் விழ, அதன் பின் அவள் யாரை கரம்பிடித்தாள் என்பதே மீதிக்கதை.
காதல் ஒரு முறை அல்ல பல முறை வரலாம், அதில் தனக்கான துணை என்பது எந்த ரூபத்திலும் இருக்கலாம் என்பதை மிக அழகாகவும் நகைச்சுவையாகவும் கையாண்டுள்ளார் ராஜு முருகன், ஆம்பளையோட வாழ முடியாது, ஆம்பளைங்க இல்லாமலும் வாழ முடியாது என வசனத்தை அப்படியே கிளைமேக்ஸில் பெண்கள் என்று மாற்றும் இடம் ரசிக்க வைக்கின்றது, இவை அனைத்தையும் அத்தனை அழகாக தாங்கி சென்றுள்ளார் படத்தின் நாயகி, தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு.
பாலாஜி சக்திவேலின் காதல்
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு வந்துள்ள ஒரு படம்(வெப் தொடர்), அசோக் செல்வன் தனக்கு பிடித்த பெண்ணிடம் தன் காதலை சொல்ல, அந்த பெண்ணிற்கு இன்னும் 10 வருடத்தில் கண் பார்வை போக போகிறது என்ற உண்மையை சொல்ல, அதையும் மீறி அசோக் செல்வன் காதலித்து அவளை கரம்பிடிக்க, பிறகு இவர்களுக்குள் இருக்கும் காதல் கடைசி வரை இருந்ததா, என்பதே மீதிக்கதை.
அசோக் செல்வன், பானு அத்தனை அழகான நடிப்பு, வீணை கற்க வேண்டும் என்ற ஆசையை அசோக் செல்வனிடம் சொல்லும் பானுவிற்கு கிளைமேக்ஸில் வீணை கற்கும் போது தெரியும் அசோக் செல்வனின் முகம் மட்டும் அத்தனை கவித்துவம். கண்டிப்பாக ஒரு முந்திர்ந்த காதலை பாலாஜி இவ்வளவு அழகாக காட்டியது பாராட்டக்குரியது. அதே நேரத்தில் இரண்டு கதாபாத்திரத்தை மட்டுமே சுற்றி முழுகதையும் சுழல்வது கொஞ்சம் பொறுமை தேவை தான்.
கிருஷ்ணகுமார் ராம்குமார் காதல்
இதுவரை தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பார்த்து வந்த கிருஷ்ணகுமார் அட இவர் படமும் இயக்குவரா என்று முதல் ஷாட்டிலேயே ஆச்சரியப்பட வைத்துள்ளார், ரிது பள்ளி பருவத்திலிருந்து நிறைய காதல் படம் பார்த்து ரியாலிட்டி லைப்-யும் சினிமா போல் காதல் கிடைக்க வேண்டும் என்று தேட, அவருக்கான காதல் கிடைத்ததா என்பதே கதை.
ரிது ஆரம்பம் முதல் கடைசி வரை துறுதுறுவென செம ஸ்கோர் செய்கிறார், அதே நேரத்தில் ஸ்கூல் மாணவி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்றாலும், அதையும் தன் துறுதுறு நடிப்பால் ஓரங்கட்டுகிறார், ஆனால், படம் முழுவதும் கௌதம் மேனன், மணிரத்னம் சாயல், வசனங்கள் தாக்கம் மிக அதிகம், அதிலும் கிளைமேக்ஸில் மியூஸிக் இல்லாமல் மழையில் ஆடுவதை ஒரு குரூப் கியூட் என்றும் ஒரு குரூப் கிரின்ச் என்றும் சொல்லும், படமும் அப்படித்தான்.
அக்ஷய் சுந்தரின் காதல்
அக்ஷய் சுந்தர் இயக்கத்தில் பாலஜி தரனிதரன் எழுத்தில் உருவாகியுள்ள தொடர் மார்கழி. ஆரம்பிக்கும் போதே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும், இளையராஜா ரசிகர்கள் என்றால் கண்களை மூடிக்கொண்டு இந்த தொடரை பாருங்கள் அல்லது கேளுங்கள் செம விருந்து வைத்துள்ளார் ராஜா.
விவாகரத்து பெற்ற ஒரு தம்பதியின் டீன் ஏஜ் மகளுக்கு ஒரு டீன் ஏஜ் பையனுடன் வரும் காதல் இதை ராஜாவின் இசையில் ஏதோ ஒரு ஆல்பம் போல் எடுத்துள்ளனர். மெதுவாக நகர்ந்தாலும் ராஜாவின் இசையே நம்மை கைபிடித்து முழு படத்தைய சுற்றி காட்டுகிறது.
பாரதிராஜாவின் காதல்
பாராதிராஜா நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது உள்ள இயக்குனர்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளார் ஒரு காதல் கதையில். காதல் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர் கிஷார், ரம்யா நம்பீசன், கிஷோருக்கு விஜயலட்சுமி மேல் ஒரு ஈர்ப்பு வர, மிக மெச்சூராக கிஷோர், விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன் அமர்ந்த தங்கள் எதிர்காலம் குறித்து பேசி ஒரு முடிவு எடுக்கின்றனர். அது தான் இந்த முழுப்படமே.
படம் முழுவதும் ஒரு உரையாடலாகவே செல்கிறது, அவை தற்போது உள்ள வெப் சீரிஸ் பார்க்கும் இளைஞர்களுக்கு கொஞ்சம் சோர்வை கொடுத்தாலும், பாராதிராஜா என்ற கலைஞன் இன்னும் சளைத்தவர் இல்லை என நிரூபித்துள்ளார், குறிப்பாக காதல் எப்போது வேண்டுமானாலும் வரலாம், இத்தனை வருடம் ஆகியும் புரியாதது மனிதனின் மனம் தானே என்ற வசனம் பாரதிராஜாவின் அனுபவத்தை காட்டுகிறது.
தியாகராஜா குமாரராஜாவின் காதல்
ஆரம்பத்திலேயே காதலர்கள் கலவி முடித்து விழித்திருக்கும் காட்சியுடன் படம் ஆரம்பிக்க, அடுத்த நொடியே இருவரும் ப்ரேக் அப் செய்து பிரிகின்றனர், சில நாட்கள் தன் காதல் நினைவிலேயே வாமிகா வாழ, அதை மறக்க கவுன்சிலிங் போகிறார், அப்போது தன் காதலன் ஒரு விபத்தில் தனது நினைவுகளை இழந்த தங்கள் காதலை மட்டும் நினைவில் வைத்திருக்க, அவனின் நல்ல நினைவுகளை தூண்ட செல்லும் காதலி அதன் பின் என்ன ஆனது என்பதே கதை.
தியாகாராஜா குமாராராஜா பல வருடத்திற்கு பிறகு தான் படம் எடுப்பார், குறியீடுகளை குவித்து வைத்திருப்பார் என்று பல காரணம் சொன்னாலும், அதை சுவாரஸ்யமாக எடுப்பதில் இன்னும் கொஞ்சம் தடுமாறி தான் வருகிறார், பிரபல இயக்குனத் வாங் கர் வாய் பாதிப்பில் இப்படத்தை எடுத்திருந்தாலும், ஆடியன்ஸ் நம்ம ஊர் என்பதை புரிந்துக்கொண்டு இனி எடுக்கலாம்.