தனி ஒருவன் 2 எப்போ? இயக்குநர் மோகன் ராஜா மற்றும் அர்ச்சனா கொடுத்த மாஸ் அப்டேட்
தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதையில் உருவான திரைப்படங்களில் ஒன்று தனி ஒருவன். இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடித்த இப்படம் 2015ல் வெளிவந்தது. இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக மிரட்டியிருந்தார்.
மேலும் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், தனி ஒருவன் 2 குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
தனி ஒருவன் 2
அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு தனி ஒருவன் 2 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வீடியோவுடன் வெளிவந்தது. ஆனால், அதன்பின் படப்பிடிப்பு துவங்கவில்லை.
இந்த நிலையில், சமீபத்திய விழா ஒன்றில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா இருவரும் கலந்துகொண்டனர். அப்போது தனி ஒருவன் 2 குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
மோகன் ராஜா பேச்சு
இதற்கு முதலில் பதிலளித்த இயக்குநர் மோகன் ராஜா, "நல்ல வேலை இருவரும் ஒன்றாக இருக்கும்போது இந்த கேள்வியை கேட்டிங்க. தனி ஒருவன் 2 படத்தின் மீது அவ்வளவு காதலை கொண்டுள்ளவர்களுக்கு நன்றி. எங்களுக்கு அது மிகவும் ஸ்பெஷல் படம். எப்போதும் அர்ச்சனா அவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார், எங்களுடைய பெருமைக்குரிய படம் அது என்று. எல்லாமே ரெடியா இருக்கு. தயாரிப்பு நிறுவனம் சரியான நேரம் சொல்கிறோம் என என்னிடம் கூறியுள்ளனர்" என மோகன் ராஜா பேசினார்.
அர்ச்சனா கொடுத்த அப்டேட்
இதன்பின் பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா "நான் முதன் முதலில் விருது என்று வாங்கியது தனி ஒருவன் படத்திற்காக தான். எங்கள் தயாரிப்பில் உருவான தலைசிறந்த படங்களில் ஒன்று தனி ஒருவன். தனி ஒருவன் 2 மிகப்பெரிய படம், முதல் பாகம் போல் இல்லை. ஆகையால் அதற்கான சரியான நேரத்தை பார்த்து படத்தை துவங்கவிருக்கிறோம். கண்டிப்பாக வரும். படத்தில் நிறைய ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க. ரவி, நயன் இருக்காங்க. சரியான நேரத்தை தான் தற்போது தேர்ந்தெடுக்க வேண்டும். தனி ஒருவன் 2 பயங்கரமான ஸ்கிரிப்ட்" என கூறினார்.