யூகிக்க முடியாத திரைக்கதை, அடுத்தடுத்த திருப்பங்கள்.. அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மிஸ்ட்ரி திரில்லர் வெப் சீரிஸ்
படங்களை தாண்டி உலகளவில் வெப் சீரிஸுக்கு என்று தனி மார்க்கெட் உருவாகிவிட்டது. நெட்பிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ போன்ற முன்னணி OTT தளங்களில் வருடத்திற்கு பல வெப் சீரிஸ் வெளியாகிறது. இதில் திரில்லர் வெப் சீரிஸ் என்றால் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த நிலையில், அடுத்தடுத்த திருப்பங்கள், யூகிக்க முடியாத திரைக்கதையில் உருவாக்கப்பட்டு OTT-யில் உள்ள ஐந்து வெப் சீரிஸ் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறறோம். வாங்க பார்க்கலாம்...
5. தி பிளாக் லிஸ்ட்
ஜான் போக்கன்காம்ப் உருவாக்கிய இந்த வெப் சீரிஸை ஜான் ஐசேந்திரத் டெவலப் செய்துள்ளார். இந்த வெப் சீரிஸில் மேகன் பூன், ஜேம்ஸ் ஸ்படேர் இணைந்து நடித்துள்ளனர்.
கதை சுருக்கம்: பல ஆண்டுகளாக FBI-இடம் இருந்து தப்பி வந்த ரேமண்ட் ரேடிங்டன், திடீரென தன்னை சரணடைய செய்கிறார். அவர், தன்னுடைய பிளாக் லிஸ்ட்டில் உள்ள பிற குற்றவாளிகளை FBI வேட்டையாட உதவுவதாக கூறுகிறார். பின், ஒரு புதிய FBI முகவராக எலிசபெத் கீன் உடன் இணைந்து பணிபுரிகிறார்.
2013ஆம் ஆண்டு இந்த வெப் சீரிஸ் தொடங்கியுள்ளது. 10 சீசன்களை கொண்ட இந்த வெப் சீரிஸ் மொத்தம் 218 எபிசோட்களை கொண்டுள்ளது. நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் இந்த வெப் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

4. ஷெர்லாக்
ராபர்ட் டௌனே ஜூனியர் நடித்த ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தை அனைவரும் அறிவோம். ஆனால், இது பெனடிக்ட் கம்பர்பாட்ச் நடிப்பில் உருவான ஷெர்லாக் வெப் சீரிஸாகும். ஸ்டீவன் மொஃபாட் மற்றும் மார்க் கேட்டிஸ் ஆகியோர் இணைந்து இந்த வெப் சீரிஸை உருவாக்கியுள்ளனர்.
கதை சுருக்கம்: லண்டனில் பல்வேறு மர்மங்களை தீர்க்கும் துப்பறிபவராக ஷெர்லாக் ஹோம்ஸ் உள்ளார். அவருக்கு உதவ, இராணுவப் பணியில் இருந்து திரும்பிய அவரது நண்பரான டாக்டர் ஜான் வாட்சன் துணையாக இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து சந்திக்கும் சவால்கள், அதை எதிர்கொள்ளும் விதம் தான் இந்த வெப் சீரிஸ்.
நான்கு சீசன்கள் வெளியாகியுள்ள நிலையில், மொத்தம் 13 எபிசோட்கள் உள்ளன. அமேசான் பிரைம் வீடியோவில் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகி வருகிறது.

3. வெட்னஸ்டே
கொரோனா காலகட்டத்திற்கு பின் அனைவரும் கவர்ந்த திரில்லர் வெப் சீரிஸில் வெட்னஸ்டேவும் ஒன்று. சார்லஸ் ஆடம்ஸ் எழுதிய வெட்னஸ்ட்டே ஆடம்ஸ் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இந்த வெப் சீரிஸை ஆல்ஃபிரட் கோஃப் மற்றும் மைல்ஸ் மில்லர் உருவாக்கியுள்ளனர்.
கதை சுருக்கம்: வெட்னஸ்டே ஆடம்ஸ், நெவர்மோர் அகாடமியில் சேர்ந்து, அங்கு நடக்கும் கொலை மர்மங்களை கண்டுபிடிக்கும் திகில் மற்றும் மர்மம் நிறைந்த கதைதான் வெட்னஸ்டே.
முதல் சீஸனின் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு இரண்டாவது சீசன் ஒளிபரப்பானது, மொத்தம் 16 எபிசோட்கள்.

2. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்
மிஸ்டரி திரில்லர் மட்டுமின்றி உலகளவில் டாப் 5 வெப் சீரிஸ் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினால், அதில் கண்டிப்பாக ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீரிஸும் இடம்பெறும். டஃபர் பிரதர்ஸ் உருவாக்கிய இந்த வெப் சீரிஸில் மில்லி பாபி பிரவுன், ஃபின் வுல்ஃப்ஹார்ட், டேவிட் ஹார்பர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
1980களில் அமெரிக்காவின் ஹாக்கின்ஸ் என்கிற நகரத்தில் வில் பையர்ஸ் என்ற சிறுவன் திடீரென மாயமாய் மறைந்துவிடுவதில் கதை தொடங்குகிறது. அவனது தாய், நண்பர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறை தலைவர் அவனை தேடி வரும்போது, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மற்றும் அரசு ரகசியங்கள் அடங்கிய மர்ம உலகில் அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். இதன்பின் என்ன நடக்கிறது என்பதை கதை.
நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ள இந்த வெப் சீரிஸ் 4 சீசன்கள் மற்றும் 34 எபிசோட்கள் கொண்டது.

1. டார்க்
சைன்ஸ் ஃபிஷன், மிஸ்டரி, திரில்லர் ஜெனரில் இந்த வெப் சீரிஸை டேவிட் பாரன் போ ஓடார் மற்றும் ஜான்ஜே ஃப்ரைஸ் உருவாக்கியுள்ளனர்.
கதை சுருக்கம்: ஒரு சிறிய நகரத்தில் உள்ள நான்கு குடும்பங்களுக்கு இடையிலான சிக்கலான உறவுகளை, காலப்பயணம் மற்றும் மர்மமான நிகழ்வுகளுடன் இணைக்கும் கதைக்களம் கொண்ட வெப் சீரிஸ்தான் டார்க்.
இந்த வெப் சீரிஸின் திரைக்கதைக்காக பல பாராட்டுக்கள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று சீசன்களை கொண்ட இந்த வெப் சீரிஸில் மொத்தம் 26 எபிசோட்கள் உள்ளன.
