பராசக்தி திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் பயோகிராபி பல வந்திருந்தாலும், ஒரு மொமண்ட் என்பதை அப்படியே படமாக எடுத்தது மிக குறைவு, அந்த வகையில் ஹிந்தி திணிப்பை மையப்படுத்தி சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம் எப்படியுள்ளது? பார்ப்போம்.

கதைக்களம்
ஹிந்தி திணிப்புக்கு எதிராக புறநானூறு என்ற குழு மூலம் சிவகார்த்திகேயன் போராடுகிறார். படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு இரயிலை எரிக்கிறார். இதை தொடர்ந்து ரவிமோகன் இந்த கும்பலை பிடிக்க வேண்டும் என கங்கனம் கட்டி சுற்றுகிறார்.
அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நண்பர் ஒருவர் இரயில் எரிப்பில் இறக்க, இனி இந்த வன்முறை, எதிர்ப்பு எல்லாம் வேண்டாம் என சிவகார்த்திகேயன் அனைத்தையும் கைவிடுகிறார்.

ஆனால், அவர் தம்பி அதர்வா அதை கையில் எடுக்க, சிவகார்த்திகேயன் ஹிந்தி படித்து டெல்லிக்கு வேலைக்கு செல்ல நினைக்கிறார்.
அப்போதும் ஹிந்தி படித்தால் தான் இனி வேலை என்ற நிலை உருவாக, சிவகார்த்திகேயன் கண்முன் ஒரு இளைஞன் இறக்க, சிவகார்த்திகேயனுக்கும் வேலை கிடைக்காமல் போக, மீண்டும் போராட்டத்தை கையில் எடுக்கும் சிவகார்த்திகேயன் வென்றாரா, ரவிமோகன் இவர்களை பிடித்தாரா? என்ற புரட்சி போராட்டமே பராசக்தி.

படத்தை பற்றிய அலசல்
சிவகார்த்திகேயன் செழியனாகவே வாழ்ந்துள்ளார். போராட்டம் என வாழ்க்கையை வாழ்ந்து, ஒரு இழப்பிற்கு பிறகு போராட்டத்தை கைவிட, இங்கு போராடினால் தான் எதுவும் கிடைக்கும் என்ற நிலையில் மீண்டும் போராட்ட களத்தில் குதிக்க, கடைசி வரை இரத்தம் சிந்தி அவர் போராடும் காட்சிகள் நடிகனாக சிவா பல மடங்கு உயர்ந்து விட்டார். கண்டிப்பாக சிவாவுக்கு இது மைல்கல் படம் தான்.
ரவி மோகன் படம் முழுவதும் அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு அதிகாரியாக, எத்தனை உயிர் போனாலும் சரி, நான் நினைப்பது நடக்க வேண்டும் என அவர் செய்யும் வேலைகள் நெஞ்சை பதபதைக்க வைக்கிறது. மிரட்டல் பெர்ப்பாமன்ஸ்.
அதர்வா எனர்ஜி பூஸ்ட் இளைஞனாக வந்து கவர்கிறார், ஸ்ரீலீலா தமிழுக்கு அறிமுகம், நல்ல நடிப்பு, ஆனால், முதல் பாதி இவர்-சிவகார்த்திகேயன் ரொமான்ஸ் காட்சிகள் பொறுமையை சோதிக்கிறது. இரண்டாம் பாதியில் கிளைமேக்ஸில் ஸ்ரீலீலா ஸ்கோர் செய்கிறார்.

படமே ஹிந்தி திணிப்புக்கு எதிரானது என்பதால், பல வரலாற்று நிகழ்வுகளை கற்பனை, சித்தரிக்கப்பட்டவை என்று போட்டாலும் அது பார்க்கும் ரசிகர்கள் படத்தோடு ஒன்றி கமெண்ட் அடித்து கட் செய்த காட்சியையும் ரசிகர்கள் புரிந்து கொள்கின்றனர்.
அதே நேரத்தில் படத்தின் மிகப்பெரிய பலம் வசனங்கள் தான், ஹிந்தி திணிப்புக்கு தான் எதிரி, ஹிந்திக்கு இல்லை, முதலில் ஹிந்தி படிங்க வேலை என்றீர்கள், இப்போ ஹிந்திகாரன் போல் பேசு என்கிறீர்கள், இரண்டு பேரையும் ஒரே கோட்டில் ஓட்டத்தை தொடங்க சொல்வது தானே முறை, சிப்பாய் கழகம் முன்பே போராடியவன் தமிழன், எனக்கு தேசபக்தி க்ளாஸ் எடுக்காதே போன்ற பொறி பறக்கும் வசனங்கள் பட்டையை கிளப்புகிறது.
ஆர்ட் ஒர்க் அப்படியே நாமும் 1960-களுக்கு சென்ற அனுபவம், படத்தின் கதை மாந்தர்கள் தேர்விலேயே படம் செம ஸ்கோர் தான், மைக்கெல் ரெட்டி ரெபரன்ஸ், பாசில் ஜோசம் கேமியோ என கிளைமேக்ஸ் கூஸ்பம்ஸ் குவிந்து கிடைக்கிறது.

படத்தின் முதல் பாதி காதல் காட்சிகள் கண்டிப்பாக கத்திரி போட்டு இருக்கலாம், அது தான் பொறுமையை சோதிக்கிறது, அதிக கட், மியூட் எல்லோருக்கும் இது புரியுமா என்ற நிலையும் உள்ளது. டெக்னிக்கலாக இப்படம் இசை, ஒளிப்பதிவு, ஆர்ட் ஒர்க் என அனைத்தும் அட்டகாசம்.
க்ளாப்ஸ்
படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள்.
பொறி பறக்கும் வசனங்கள்.
டெக்னிக்கல் ஒர்க்.
பல்ப்ஸ்
முதல் பாதி காதல் காட்சிகள்.
மொத்தத்தில் இந்த பராசக்தி தமிழர்கள் நெஞ்சில் என்றுமே அணையாத தீ.
