கமல்ஹாசனின் குணா திரைப்படம் தோல்வி அடைந்தது ஏன்?- ஓபனாக கூறிய பிரபலம்
குணா திரைப்படம்
சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன், ரேகா, புதுமுக நடிகை ரோஷினி என பலர் நடிக்க 1991ம் ஆண்டு வெளியான படம் குணா.
இந்த படத்தில் மிகவும் ஸ்பெஷலான விஷயம் என்றால் அது ஒரு குகையில் படத்தை எடுத்திருப்பார்கள், அதில் ஒரு ஸ்பெஷல் பாடலும் வரும். படம் வெளியாகி பல வருடங்கள் ஆன நிலையில் தற்போது குணா பற்றி பலரும் பேசுகிறார்கள், காரணம் இன்னொரு படம் தான்.
மலையாளத்தில் தயாரான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படத்தில் குணா படத்தில் வந்த குகை செட் போட்டு படம் எடுத்துள்ளார்.
இதனால் மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் குணா படம் குறித்து சமீப நாட்களாக பேசப்படுகிறது.

படம் பற்றி பிரபலம்
இந்த நிலையில் குணா படத்தை எடுத்த சந்தான பாரதி ஓரு பேட்டியில் பேசும்போது, மஞ்சும்மல் பாய்ஸ் படம் பார்த்தேன், அற்புதமாக எடுத்திருக்கிறார்கள், குணா குகையை அவ்வளவு அற்புதமாக எப்படி செட் போட்டார்கள் என தெரியவில்லை.
ஒரு குகை வேண்டும் என கேட்டபோது அங்கிருந்த கைடு ஒருவர் எங்களை அழைத்து சென்றார். அப்படி போய் பார்த்ததுதான் அந்த குகை. இந்த இடத்தில் நிறைய குழிகள் இருக்கும். அதில் விழுந்தால் நேராக கீழே போய்விட வேண்டியதுதான்.
அதனால் ஜாக்கிரதையாக இருங்கள் என அந்த கைடு சொன்னார். ஆனால் எங்களுக்கு எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. 3 குகைகள், அதில் 3வது குகைக்கு செல்வது கஷ்டமாக இருந்தது, 4 பேர் முதலில் போய் பார்த்த போது ஒவ்வொருத்தராக கைகளை பிடித்துக்கொண்டு போனோம்.
ஒரு யூனிட்டே போக வேண்டும் என்று வனத்துறையினரிடம் பேசியபோது அந்த குகைக்கு செல்ல படிகளாக வெட்டிக் கொடுத்தனர், மரங்களை எல்லாம் வெட்டினர்.
கயிறு மூலம்தான் மூன்றாவது குகைக்கு சென்றோம். டிபன் சாப்பிட்டுவிட்டு காலை 7 மணிக்கு கீழே சென்றால் அத்துடன் மாலை 5 மணிக்குத்தான் மேலே வருவோம். சாப்பாடெல்லாம் கிடையாது.
34 ஆண்டுகள் கழித்து மஞ்சுமெய் பாய்ஸால் குணா படம் பேசப்படுகிறது என்பது பெருமையாக இருக்கிறது.
குணா படமும் தளபதி படமும் ஒன்றாக வெளியே வந்தது. ஆனால் குணா படம் மக்களுக்கு புரியவில்லை என்பதால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனால் இன்று குணா படம் பேசப்படுகிறது என்றால் அப்போ அது நல்ல படம்தானே என கூறியுள்ளார்.
