டென் ஹவர்ஸ் திரைவிமர்சனம்
அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே இளம் பெண் ஒருவர் கடத்தப்படுகிறார், அதை தொடர்ந்து அவரது தாய் மற்றும் தாத்தா இருவரும் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்கின்றனர். அதன் அடிப்படையில் உடனடியாக விசாரணை செய்கிறார் இன்ஸ்பெக்டர் சிபிராஜ்.
பெண் கடத்தப்பட்ட வழக்கை சிபிராஜ் விசாரித்துக் கொண்டு இருக்கும்போதே, கண்ட்ரோல் ரூமுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் போன் கால் ஒன்று வருகிறது. இதில் தனியார் பேருந்தில் பெண் ஒருவர் கொடுமைப்படுத்தப்படுகிறார், அவரை காப்பாற்றுங்கள் என ஆண் ஒருவர் தகவல் தெரிவிக்கிறார்.
இதை அறிந்து அந்த பேருந்தை செக்போஸ்டில் போலீஸ் பிடிக்கிறார்கள். பேருந்திற்குள் சிபிராஜ் சென்று பார்க்க, அங்கு கண்ட்ரோல் ரூமிற்கு போன் செய்த நபர் இறந்து கிடக்கிறார்.
இளம் பெண் கடத்தப்பட்டது.. பெண் ஒருவர் பேருந்தில் கொடுமை செய்யப்படுகிறார் என வந்த தகவல்..!! தகவல் கூறிய நபர் பேருந்தில் இறந்து கிடப்பது என அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்களை சிபிராஜ் சந்திக்க, இதற்கெல்லாம் யார் காரணம் என கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
ஹீரோ சிபிராஜ் இதுவரை பல படங்களில் போலீசாக நடித்திருந்தாலும், டென் ஹவர்ஸ் படத்தில் சற்று மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீதி எதிராக யார் செயல்பட்டாலும், அவருக்கு இரக்கமே காட்டக்கூடாது என்கிற கொள்கையுடன் உள்ள காஸ்ட்ரோ என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
அதே போல் ஒரு கேஸை விசாரிக்கும் விதத்திலும் சிபி ராஜின் நடிப்பு பாராட்டக்கூடிய வகையில் உள்ளது. மேலும் ராஜ் அய்யப்பா, கஜராஜ் ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருந்தது. இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் தனது அறிமுக இயக்கத்திலேயே திரில்லர் கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.
ஒரே இரவில் நடிக்கும் கதை, சிபிராஜின் தோற்றம் எல்லாம் டிரைலரில் வந்தவுடன் இது கைதி படத்தின் சாயல் என கூறப்பட்டது. ஆனால், டென் ஹவர்ஸ் திரைப்படம் கைதி படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக தான் உள்ளது.
இயக்குநர் எடுத்துக்கொண்ட கதைக்களமும், அதை திரைக்கதையில் வடிவமைத்த விதமும் நன்றாக இருந்தது. ஆனால், அதை இன்னும் சுவாரஸ்யமாகவும், திரில்லிங்காகவும் காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதே போல் விசாரணையில் சிபிராஜ் பேசும் விஷயங்கள் சில இடங்களில் குழப்பமாக இருந்தது.
மேலும், திரில்லர் கதை என்றாலே வில்லன் தான் மிகவும் முக்கியம். ஆனால் வில்லனுக்கு துணையாக இருந்த பஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் இருந்த வலு, வில்லனுக்கு இல்லாதது படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்.
பின்னணி இசை படத்திற்கு பலம். பல இடங்களில் தொய்வு ஏற்படாமல் இருந்ததற்கு காரணமாமே சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை. எடிட்டிங் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம். ஒளிப்பதிவு ஓகே.
பிளஸ் பாயிண்ட்
சிபிராஜ் நடிப்பு
நடிகர், நடிகைகளின் பங்களிப்பு
கதைக்களம்
மைனஸ் பாயிண்ட்
வலு இல்லாத வில்லன் கதாபாத்திரம்
திரைக்கதையை இன்னும் திரில்லிங்காக கூறியிருக்கலாம்