தேரே இஷ்க் மே: திரைவிமர்சனம்
ராஞ்சனா என்கிற காதல் காவியத்தை கொடுத்த கூட்டணி தனுஷ் - ஆனந்த் எல். ராய். அவர்களுடைய அதே ராஞ்சனா உலகில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம்தான் தேரே இஷ்க் மே. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து க்ரித்தி சனோன் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள தேரே இஷ்க் மே படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.

கதைக்களம்
இந்திய விமானப்படையின் வீரராக இருக்கும் தனுஷ், தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், தனக்கு மேல் உள்ள அதிகாரிகள் பேச்சை கூட கேட்காமல் தன் மனதிற்கு சரி என பட்டதை செய்து வருகிறார். கட்டுப்பாடுடன் இவர் செயல்பட வேண்டும் என்பதற்காக தனுஷை சைக்காலஜி மருத்துவரிடம் கவுசிலிங் எடுக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு கதாநாயகி க்ரித்தி சனோன் இடம் செல்ல, தானே முன் வந்து தனுஷுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறுகிறார். இருவரும் சந்திக்க முன் கதை தொடங்குகிறது.

கல்லூரியில் படித்து வரும் தனுஷ் மிகவும் வன்முறையான மனிதனாக இருக்கிறார். மறுபக்கம் தனது ஆய்வறிக்கை (thesis) மூலம் எப்படிப்பட்ட வன்முறையான மனிதனாக இருந்தாலும், அவரை நார்மலான மனிதனாக மாற்ற முடியும் என நம்புகிறார் க்ரீத்தி. வன்முறையான மனிதராக இருக்கும் தனுஷை மாற்றிவிட்டால், கீர்த்தியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும். இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார்.
ஆனால், தனுஷுக்கோ தன்னை காதலித்தால் ஆய்வறிக்கைக்கு உதவுகிறேன் என கூறுகிறார். சரி, நான் இதை காதலாக பார்க்கவில்லை, நீ வேண்டும் என்றால் காதலித்துக் கொள் என கீர்த்தி கூற, இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். இதில் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால், வன்முறையோடு இருக்கும் இப்படி ஒரு மனிதனை கீர்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், தனது தந்தையை வந்து பார்க்கும்படி தனுஷிடம் கூறுகிறார்.

அங்கு, தான் ஒரு IAS அதிகாரி Prelims, Mains, and Interview ஆகியவற்றை கடந்து இவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்திருக்கிறேன். உன்னுடைய தகுதி என்ன, நீ என்ன வேலை செய்கிறாய் என தனுஷிடம் கீர்த்தியின் தந்தை கேட்கிறார். இதனால் மனமுடைந்து போகும் தனுஷ், தானும் UPSC படிக்கிறேன், அதில் Prelims, Mains, and Interview முடித்து அதிகாரி ஆகி காட்டுகிறேன் என கூறி, கீர்த்தியை காத்திரு என சொல்லிவிட்டு செல்கிறார்.
மூன்று வருடங்களுக்கு பின், Prelims முடித்துவிட்டு கீர்த்தியை பார்க்க வருகிறார் தனுஷ். ஆனால், கீர்த்தி தனக்கான வாழ்க்கை துணையை தேடி கொண்டார், இருவருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில், தனுஷ் அங்கு வர மிகப்பெரிய கலவரம் ஏற்படுகிறது. இந்த கலவரத்தால் காவல் துறையால் கைது செய்யப்படுகிறார் தனுஷ், தனுஷின் தந்தை பிரகாஷ் ராஜ் மரணமடைகிறார். ஒரு பக்கம் காதலிக்கு திருமணம், மறுபக்கம் தந்தையின் மரணம்.. இதன்பின் என்ன நடந்தது என்பதே தேரே இஷ்க் மே...

படத்தை பற்றிய அலசல்
இயக்குநர் ஆனந்த் எல். ராய் தனது வழக்கமான காதல் கதையில் மீண்டும் பட்டையை கிளப்பியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக எமோஷனல் காட்சிகள் நம்மை வெகுவாக கவருகிறது.
ராஞ்சனா படத்தில் எப்படி குந்தன் நம்மை கண்கலங்க வைத்தாரோ, அதே போல் இப்படத்தில் சங்கரும் நம்மை கலங்க வைத்துவிட்டார். அதுவே படத்தின் மிகப்பெரிய வெற்றி.

சிறு வயதில் ஏற்பட்ட மிகப்பெரிய துயரத்தில் ஒருவன் குணம் எப்படி மாறுகிறது. அதே குணம் ஒரு பெண்ணை பார்க்கும்போது எப்படி மாறுகிறது என்பதை எமோஷனலாக காட்டியுள்ளார். அதே போல் ஒரு சில இடங்களில் தனுஷ் நடித்த ஷங்கர் கதாபாத்திரம், சந்தீப் ரெட்டி வங்காவின் அர்ஜுன் ரெட்டி சாயலில் உள்ளது. அது கனெக்ட் ஆகவில்லை.
அதே போல் க்ரீத்தி சனோன் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். தனுஷுக்கு நிகரான நடிப்பை திரையில் காட்டியுள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் தேவதாஸ் போல காதலில் பாதிக்கப்பட்டு வாடும் காட்சிகளில் க்ரீத்தியின் நடிப்பு வேற லெவல்.

இவர்களை தாண்டி அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார் பிரகாஷ் ராஜ். ஊதாரி தனமாக சுற்றிக்கொண்டிருக்கும் மகனை பார்த்துக்கொள்ளும் தந்தையாக படம் முழுக்க இருப்பாரோ என எதிர்பார்த்த நிலையில், மகனுக்காக ஒரு தந்தை எந்த எல்லைக்கும் செல்வான், அது சண்டை போடுவது மட்டுமல்ல தனது கவுரவத்தை விட்டுக் கொடுப்பதுதான் என்பதை பிரகாஷ் ராஜ் தனது நடிப்பில் சிறப்பாக காட்டியுள்ளார்.
கதாபாத்திரங்களை தாண்டி இயக்குநர் ஆனந்த் எல். ராய் திரைக்கதையில் அமைத்த காட்சிகளும் நம்மை கவர்ந்தது. தமிழ் டப்பிங் சில இடங்களில் சொதப்பினாலும், அந்த காட்சியின் எமோஷன் நம்முள் கடந்துவிட்டது. மேலும் படத்தின் மிகப்பெரிய ஹைலைட் ராஞ்சனா படத்தின் கனெக்ட். அதை கதாநாயகன் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக கொண்டு வந்த விதமும் சிறப்பு.

ஆனால், படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். ஆங்காங்கே தொய்வு ஏற்படுகிறது. இடைவேளை காட்சி பெரிதாக சொல்லும் அளவிற்கு இல்லை. ஆனால், கிளைமாக்ஸ் அனைவரையும் கலங்க வைத்துவிட்டது.
படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர். ரஹ்மான், தனது பாடல்களாலும் பின்னணி இசையிலும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்கிறார். காதல் கதைக்களத்தில் உருவாகும் படத்திற்கு உயிரே இசைதான். அதை சிறப்பாக செய்து, இப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். அதை அவர் எந்த படத்திலும் தவறவிட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எடிட்டிங், ஒளிப்பதிவு, VFX படத்திற்கு பலம்.

பிளஸ் பாயிண்ட்
தனுஷ், க்ரீத்தி சனோன், பிரகாஷ் ராஜ் நடிப்பு
காதல் மற்றும் எமோஷனல் காட்சிகள்
கிளைமாக்ஸ்
ஏ.ஆர். ரஹ்மானின் இசை
ஆனந்த் எல். ராய் இயக்கம்
ராஞ்சனா கனெக்ட்
எடிட்டிங்
மைனஸ் பாயிண்ட்
படத்தின் நீளம்
ஆங்காங்கே ஏற்படும் தொய்வு
தமிழ் டப்பிங் சில இடங்களில் சொதப்பல்
மொத்தத்தில் 'தேரே இஷ்க் மே' காதலிக்கும் அனைவருக்கும் காவியம் என்று சொல்லவில்லை, உண்மையாக காதலிப்பவர்களுக்கு இது காவியம்தான்...
