தலைவர் தம்பி தலைமையில்: திரை விமர்சனம்
ஜீவா நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்துள்ள தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.

கதைக்களம்
ஊர்த்தலைவரான ஜீவா எந்த பிரச்சனை என்றாலும் தலையிட்டு தீர்த்து வைக்கும் செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். இதனால் எந்த நல்லது கெட்டது என்றாலும் அவரது பங்களிப்பு இருக்கும் சூழலில், இளவரசுவின் மகள் சௌமியாவிற்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.
தேர்தல் சமயத்தில் அந்த திருமணத்தை நல்ல முறையில் நடத்தி முடித்தால் வாக்குகள் தனது கட்சிக்கு கிடைக்கும் என்பதாலும், சௌமியா தனக்கு தங்கை போன்றவர் என்பதாலும் முக்கிய நபராக இளவரசுவின் வீட்டிற்கு ஜீவா செல்கிறார்.

அதே சமயம் பக்கத்துக்கு வீட்டுக்காரரான தம்பி ராமையாவிற்கு, இளவரசுவிற்கும் பகை ஒரு பக்கம் இருக்க, இறந்துபோன தனது மகளை நினைத்து சோகத்தில் உள்ளார்.
ஆட்டம் பாட்டம் என கல்யாண வீடு களைகட்ட, பக்கத்து வீட்டில் தம்பி ராமையாவின் அப்பா இறந்துவிடுகிறார். இது ஜீவாவுக்கு தெரிய வர, திருமண வீட்டில் இதனால் எந்த தடையும் வரக்கூடாது என்று சுமூகமாக துக்க வீட்டு சடங்குகளை செய்து முடிக்க பார்க்கிறார்.

ஆனால் இளவரசு மீதான கோபத்தினால் முகூர்த்த நேரத்தில்தான் அப்பாவின் உடலை எடுக்க வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடிக்க, ஜீவா எப்படி இரண்டு நிகழ்வுகளையும் பொதுவான நபராக இருந்து முடித்தார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
மலையாளத்தில் பேலிமி என்ற படத்தை கொடுத்த நிதிஷ் சஹதேவ் இப்படத்தை இயக்கியுள்ளார். சீரியஸான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதில் முடிந்த அளவு காமெடியையும் கையாண்டுள்ளார்.
அத்துடன் சில அரசியல் கருத்துக்களையும் போகின்ற போக்கில் கூறியிருக்கிறார். எம்பிகே என்ற கட்சியைச் சேர்ந்த ஊர்த்தலைவராக ஜீவா, அந்த கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி போகிறார்.

காமெடி ஜானர் படங்களில் அசால்ட்டாக ஸ்கோர் செய்யக்கூடிய ஜீவா, இந்தப் படத்தில் காமெடியைத் தாண்டி எமோஷனலான இடங்களிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இளவரசு, தம்பி ராமையா ஆகிய இருவரிடமும் மாட்டிக்கொண்டு முழிக்கும்போது, இடையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜென்சன் திவாகரும் குடைச்சல் கொடுக்க அல்லல்படுகிறார் ஜீவா.
அந்த இடங்கள் எல்லாம் அலப்பறைதான். கல்யாண பெண்ணான பிராத்தனா உடைந்து பேசும் ஒரு காட்சியில் ஸ்கோர் செய்துவிட்டு செல்கிறார். அவரை மணக்க இருக்கும் மாப்பிள்ளை செய்யும் விஷயங்கள் எல்லாம் திருமணமாகாத 90ஸ் கிட்ஸின் வலி.

ஜென்சன் திவாகர் சைலண்ட் வில்லனாக மிரட்டுவதுடன், மாப்பிள்ளையை நேரில் பார்த்து பேசும் காட்சியில் அட்டகாசம் செய்கிறார். சாதி, பகை உணர்வு போன்றவற்றை கதையுடன் ஓட்டத்துடனே இயக்குநர் காட்டிய விதம் அருமை. ட்ரைலரை பார்க்கும்போது முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும் என்று இருந்தது.
ஆனால், வேறு சில விஷயங்களை பேசி கமர்ஷியலாகதான் இயக்குநர் நிதிஷ் கொடுத்துள்ளார். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானதாகவே உள்ள வகையில் எழுதியிருக்கிறார்கள் சஞ்சோ ஜோஸப், நிதிஷ் சஹதேவ் மற்றும் அனுராஜ்.

பப்லு அஜூவின் ஒளிப்பதிவு, அர்ஜுன் பாபுவின் படத்தொகுப்பு மற்றும் விஷ்ணு விஜயின் பின்னணி இசை ஆகியவை படத்திற்கு முக்கிய தூண்கள். வசனங்கள் காட்சிக்கு ஏற்ப ஏழுதப்பட்டிருப்பது சிறப்பு. குறிப்பாக கண்டிஷன்ஸ பாலோ பண்ணுங்கடா சொன்னேனே என்ற வசனம் வரும் இடம் நச். ஜீவாவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கமர்ஷியல் ஹிட் படம் என்றே கூறலாம்.
க்ளாப்ஸ்
ஜீவா, இளவரசு, தம்பி ராமையா கூட்டணி
திரைக்கதை
படத்தொகுப்பு
பின்னணி இசை
பல்ப்ஸ்
இன்னும் காமெடிக்கு எழுதியிருக்கலாம்
மொத்தத்தில் தலைவர் தம்பி தலைமையில் இந்த பொங்கலை கொண்டாடலாம். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

கிரீன்லாந்திற்கு படைகளை அனுப்பும் ஜேர்மனி, பிரான்ஸ் - ட்ரம்ப்பிற்கு அழுத்தம் அதிகரிப்பு News Lankasri