தீயவர் குலை நடுங்க: திரை விமர்சனம்
அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள தீயவர் குலை நடுங்க திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
ஜெபநேசன் என்ற எழுத்தாளர் மர்ம நபரால் கொல்லப்படுகிறார். அந்த வழக்கை கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகுடபதி (அர்ஜுன்) விசாரிக்க ஆரம்பிக்கிறார். அதே சமயம் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் மீரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மெட்ரிமோனி மூலம் சந்திக்கும் ஆதியை அவர் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். இருவரும் பழக ஆரம்பிக்க, மனநலம் சரியில்லாத அம்மாவை உடன் இருந்து கவனித்துக் கொள்வதால்தான் ஆதியை திருமணம் செய்துகொள்ள நினைத்ததாக மீரா அவரிடமே கூறுகிறார்.

இதற்கிடையில், எழுத்தாளர் கொலை வழக்கில் அவர் அச்சிட வேண்டாம் என்று கூறி எழுதிய புத்தகத்தை வைத்து விசாரணையில் ஈடுபடும் மகுடபதி, அது தொடர்பாக ஆதி இருக்கும் குடியிருப்புக்கு செல்கிறார். அதே சமயம் அங்கு ஆதியைப் பார்க்க வரும் மீராவிடம், குடியிருப்பு உரிமையாளரின் மகன் அத்துமீற அங்கு கலாட்டா ஆகிறது.
அதனை கவனிக்கும் மகுடபதி குறுக்கிட்டு சண்டையை தீர்த்து வைக்கிறார். அதில் கோபமடையும் குடியிருப்பு உரிமையாளரின் மகன் மகுடபதியை எச்சரிக்கிறார். இந்த சூழலில் கொலை வழக்கில் மீரா சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை மகுடபதி கண்டுபிடிக்க, அதன் பின்னர் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
கிரைம் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் படங்களுக்கே உரிய ஓபனிங் ஆக படம் ஆரம்பிக்கிறது. முதல் பாதி வரை மெதுவாக திரைக்கதை நகர்ந்தாலும் கொலைக்கான மோட்டிவ் என்னவாக இருக்கும் என்று நாம் யோசிக்கும் வகையில் இருப்பதால் இடைவேளை டுவிஸ்ட் உடன் முடிகிறது.
பிற்பாதியில் வரும் பிளாஷ்பேக் நல்ல எமோஷனல் டச். பல காட்சிகள் யூகிக்க கூடிய வகையில் உள்ளன. ஒரு கட்டத்தில் இவர் தான் அந்த ஆள் என்று முக்கிய கதாபாத்திரம் கூறும் முன்பே படத்தை பார்க்கும் ஆடியன்ஸ் நாமே கூறிவிடுவோம். அந்த அளவிற்கு வீக்கான ரைட்டிங்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆர்ப்பாட்டம் இல்லாத விசாரணை அதிகாரியாக தனக்கே உரிய பாணியில் நடித்துள்ளார். அவர் பேசும் சில வசனங்கள் அவருக்கே உரிய வகையில் எழுதப்பட்டது சிறப்பு. குறிப்பாக மனைவியை விவாகரத்து செய்ய முயற்சிக்கும் கணவனிடம் நம்பிக்கை குறித்து அர்ஜுன் விளக்கும் காட்சியில் பேசும் வசனங்களை கூறலாம்.
லிஃப்ட் சண்டைக்காட்சியில் ஆக்ஷன் கிங் என்பதை காட்டுகிறார். இப்படியாக அவருக்கான கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சண்டைக்காட்சியில் பிரமாதப்படுத்தியுள்ளார்.

கிளைமேக்சில் அவர் பேசும் வசனங்கள் நல்ல மெசேஜ். அவரை சுற்றித்தான் கதை நகர்கிறது. என்றாலும் அர்ஜுனின் ஸ்கிரீன் பிரசென்ஸ் அவரையும் தாண்டி கவனிக்க வைக்கிறது. நல்ல கதையை நேர்த்தியான திரைக்கதையில் கொடுக்க இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் தடுமாறியுள்ளார்.
என்றாலும் தற்போதைய சூழலில் இப்படியும் குற்றங்கள் நடக்கும் அல்லது நடக்குமோ என்ற எச்சரிக்கையை கொடுத்ததற்கு பாராட்டலாம். வேல ராமமூர்த்தி, ராம்குமார், பிரவீன் ராஜா, தங்கதுரை, அபிராமி ஆகியோர் தங்களது ரோலினை சரியாக செய்துள்ளனர்.

க்ளாப்ஸ்
கதைக்களம்.
அர்ஜுன்.
கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.
ஃப்ளாஷ்பேக்.
பல்ப்ஸ்
திரைக்கதைக்கு இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
யூகிக்கக் கூடிய காட்சிகள் மற்றும் டுவிஸ்ட்கள்.
மொத்தத்தில் இந்த தீயவர் குலை நடுங்க நினைத்த அளவிற்கு நடுங்க வைக்கவில்லை. எனினும் கிரைம் திரில்லர் ரசிகர்கள் ரசிக்கலாம்.
