Pallichattambi திரை விமர்சனம்
பள்ளிச்சட்டம்பி
டோவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் வெளியாகியுள்ள பள்ளிச்சட்டம்பி மலையாளத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
1957யில் கானியார் என்ற கிராமத்தில் கிறித்துவ மக்களுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் இடையே உரசல் இருக்கிறது. நம்மூரில் கம்யூனிஸ்ட்களை வளர விடுவது பேராபத்து, அவர்கள் நமக்கு எதிரானவர்கள் என்று பாதிரியார் விஜயராகவன் பிரச்சாரம் செய்கிறார்.
ஆனால், அடாவடியான நபரான குயின்டன் ஜார்ஜ் திடீரென இன்றுமுதல் நானும் கம்யூனிஸ்ட்தான் என்று கூறி கொடியை நடுகிறார். இது கிருத்துவத்தை பின்பற்றுபவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்த, தோமாபுரத்தில் இருந்து கிருஷ்ண பிள்ளை (டோவினோ தாமஸ்) மற்றொரு பாதிரியார் மூலம் கானியாருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.

போத்தன் கிறிஸ்டோபர் என்ற கிருத்துவ அடையாளத்துடன் வரும் அவர், முதல் நாளே குயின்டன் ஜார்ஜை (பாபு ராஜ்) அடக்கி தான் வந்த வேலையை ஏராளத்தள முடிக்கிறார். ஆனால் அதன் பின்னர் தான் மிகப்பெரிய பிரச்சனை காத்திருக்கிறது.
மொத்த ஊரையும் அழிக்க ஒரு சதி நடக்கிறது. அதிலிருந்து போத்தன் என்கிற கிருஷ்ண பிள்ளை கானியாரை காப்பற்றினாரா? அவர் உண்மையில் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
ஜன கன மன என்கிற பிளாக்பாஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த டிஜோ ஜோஸ் ஆண்டனிதான் இப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு ஊர்; அதனை காப்பாற்ற வரும் ஹீரோ..அவர் எப்படி காப்பாற்றினார்? என்ற வழக்கமான கதைக்கருவை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.
ஆரம்ப காட்சியே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்து மிரட்டுகிறார் டிஜோ ஜோஸ். ஹீரோவின் அறிமுகம் எதிரிகளை கையாள்வது என முதல் பாதி பார்த்து பழகிய காட்சிகளாக நகர்கிறது.
என்றாலும் சாதி அரசியல், ஒற்றுமை என ஆங்காங்கே சில கருத்துக்களையும் கூறியிருக்கிறார் இயக்குநர். இடைவேளையில் வில்லனின் அறிமுகத்தை மாஸாக காட்டிவிட்டு, இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் ரொமான்ஸ் காட்சிகள் நகர்வது செம போங்கு. இவர்தான் வில்லன் என்று நினைக்கும்போது திடீரென ஒரு ஸ்டார் ஹீரோ மெயின் வில்லனாக அறிமுகம் ஆகிறார்.

கடைசி அரைமணி நேரம் பரபரப்பாகவே நகர்ந்தாலும் கே.ஜி.எப், தனுஷின் கர்ணன் படங்களை நியாபகப்படுத்துகிறது. ஒரு கன்னட கதாபாத்திரம் மலையாளத்தை கலந்து பேசுகிறது.
ஆனால் திடீரென தமிழிலும் பேசுவதுதான் ஏன் என்று தெரியவில்லை. நடிகர்களைப் பொறுத்தவரை டோவினோ தாமஸ் முழுப்படத்தையும் தோளில் தாங்குகிறார். தோற்றத்திலும் கம்பீரத்தை காட்டும் டோவினோ, ஆக்ஷன் காட்சிகளில் பொறி பறக்க வைக்கிறார். கயாடு லோஹர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

போலீஸாக வரும் ஷத்ரு பார்வையிலும், உடல்மொழியிலும் வில்லத்தனத்தில் மிரட்ட, விஜயராகவன் அமைதியான பாதிரியாராக ஸ்கோர் செய்கிறார். ஒரு சூத்திரதாரி கதாபத்திரத்தை கொடுத்துவிட்டு ஆடுகளம் நரேனை ஒரு வார்த்தை கூட பேச வைக்காமல், சித்திக் மட்டுமே அவரை சுற்றி சுற்றி பேசுகிறார்.
இயக்குநர் ஏன் அப்படி செய்தார் என்று புரியவில்லை. இதுபோன்ற சில கேள்விகளும், குறைகளும் இருந்தாலும் ஒரு மாஸ் ஆக்ஷன் படம் என்று பார்ப்பவர்களை இப்படம் கவரும். ஜேக்ஸ் பிஜோயின் பாடல்கள், பின்னணி இசை சிறப்பு. திஜோ டாமியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு கச்சிதம்.
க்ளாப்ஸ்
டொவினோ தாமஸ் ஆக்ஷன் காட்சிகள் கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
வழக்கமான திரைக்கதை சுவாரஸ்யம் குறைந்த காட்சிகள்
மொத்தத்தில் இந்த பள்ளிச்சட்டம்பி (டொவினோ) தனியாளாக படத்தை காப்பாற்றிவிட்டான். ஆக்ஷன் பட விரும்பிகள் பார்க்கலாம்.
ரேட்டிங்: 2.75/5
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri