ஒரு பக்கம் கண்ணதாசன், மறுபக்கம் பட்டுக்கோட்டை.. நடுவில் புகுந்து ஹிட் கொடுத்த கவிஞர் வாலி.. அது எப்படி தெரியுமா?
கவிஞர் வாலி
தமிழ் திரையுலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்தவர் கண்ணதாசன். இவர் எழுதிய ஏராளமான பாடல்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளன. ஆனால், இது கண்ணதாசன் அவர்களை பற்றிய பதிவு அல்ல.

கண்ணதாசனுக்கு போட்டியாக சினிமாவில் பாடல் எழுத வந்த, பின்னாளில் அவருடைய நெருங்கிய நண்பராக மாறியவர் கவிஞர் வாலி. இவர் தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதி சாதனை படைத்துள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பாடல்கள் எல்லாம் இன்றைக்கும் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

ஹிட் கொடுத்த வாலி
வாலி சினிமாவில் என்ட்ரி கொடுத்து பல ஹிட் பாடல்களை கொடுத்த காலகட்டத்தில் கண்ணதாசன் மற்றும் பட்டுக்கோட்டையார் உச்சத்தில் இருந்தனர். அவர்கள் இருவரும் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும்போது வாலி எப்படி சினிமாவில் ஜொலித்தார் என்பதை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? அதைப்பற்றி கவிஞர் வாலி அவர்கள் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய வாலி, "பட்டுக்கோட்டையார் பாட்டு பயங்கர ஹிட்டாக இருக்கிறது, 'மாலையிட்ட மங்கை' படத்திற்கு பின் கண்ணதாசன் பாட்டும் அதற்கு மேலே பிச்சு உதறுகிறது. 1958-ல் 'மாலையிட்ட மங்கை' வந்தது. இவர்களுக்கு நடுவில் நாம் எழுதி எப்படி வெற்றிபெற முடியும் என சொல்லி பல பேர் மிரண்டு போய், சினிமாவிலிருந்து விலகி இருக்கின்றார்கள். நான் என்ன தைரியத்தில் வந்தேன் என்றால், அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் எழுதுகிறார்கள், எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன் என்ற எண்ணத்தை நான் வளர்த்துக்கொண்டேன். அதைத்தான் நான் ஒரு பத்திரிகையில் கூட சொன்னேன்".

"கண்ணதாசன், பட்டுக்கோட்டை போன்ற பெரிய கப்பல்கள் கடலிலே மிதந்து கொண்டிருக்கும்போது, நான் ஒரு சிறிய கட்டமரத்துடன் கடலில் இறங்கினேன். நம்மாலும் முடியும் என்கிற தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு கண்டிப்பாக வேண்டும். சினிமா பட்டை விட்டுவிடுங்கள், ஒரு மெக்கானிக் வேலை போன்ற எந்த வேலைக்கு போனாலும், 'இது நம்மால் முடியும், நாம் செய்யலாம்' என்கிற தன்னம்பிக்கையையும், அதோடு கொஞ்சம் ஞானமும் இருந்தால், அந்த தன்னம்பிக்கை உங்களை மேலே இழுத்துக்கொண்டு போய் உயர்த்திவிடும். எடுத்தவுடனேயே பயந்து, 'இதெல்லாம் நம்மால் முடியாது' என்று பின்வாங்கி போனவர்கள் பலரை பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதுதான் காரணமாக இருக்கலாம்".

"எனக்கு தெரிந்து நடிக்க வந்தவர்கள் கூட, 'சிவாஜிக்கு முன்னாடி எல்லாம் நாம் நடித்து எந்த காலத்தில் முன்னுக்கு வருவது?' என மிரண்டு போனவர்களும் உள்ளனர். ஆனால், 'இந்த தொழில் நாம் ஈடுபட்டு பெருசாக இல்லை, பிரகாசிக்க முடியாது' என்ற ஒரு எண்ணம் இருக்குமானால், கண்டிப்பாக நீங்கள் அந்த தொழிலை விட்டுவிட்டு, எதில் முழு ஈடுபாட்டோடு இறங்க முடியுமோ, அதில்தான் இறங்க வேண்டும்" என்று வாலி கூறியுள்ளார்.

முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu