வலது வஷத்தே கள்ளன்: திரை விமர்சனம்
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிஜு மேனன், ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியாகியுள்ள வலது வஷத்தே கள்ளன் மலையாளத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.

கதைக்களம்
காலடி காவல் நிலையத்தில் CI அதிகாரியாக இருக்கும் ஆண்டனி சேவியரிடம், ஐரின் என்ற தனது மகளை காணவில்லை என சாமுவேல் ஜோசப் புகார் கொடுக்கிறார்.
அப்போது யார் என்ன என்று அப்பெண்ணைப் பற்றி தெரியாதது போலவே ஆண்டனி விசாரிக்கிறார். அதன் பின்னர்தான் ஆண்டனியிடம் ஏற்கனவே பெண்ணொருவருக்காக ஐரின் சண்டையிட்டதும், அவரது மகன் முன்பே கோபமாக பேசிவிட்டு சென்றதும் சாமுவேலுக்கு தெரிய வருகிறது.

இந்த நிலையில் ஐரின் சடலமாக கிடைக்க, உடைந்து போகும் சாமுவேல் அதற்கு காரணமானவரை கண்டுபிடிக்க முயல்கிறார்.
அவருக்கு ஆண்டனி மீது சந்தேகம் ஏற்பட, அவரை ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வைக்க சாமுவேல் ஒரு முயற்சியை எடுக்கிறார். பின் உண்மைக் குற்றவாளி யார்? சாமுவேல் மகளின் மரணத்திற்கு நீதி கிடைத்ததா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்
மிராஜ் படத்திற்கு பிறகு மற்றொரு க்ரைம் த்ரில்லர் படத்துடன் வந்துள்ளார் இயக்குநர் ஜீத்து ஜோசப். முதல் பாதியில் யூகிக்கக் கூடிய காட்சிகளுடன் திரைக்கதையை கொண்டு சென்று, இரண்டாம் பாதியில் ஒரு ட்விஸ்ட்; அதற்கு ஒரு ட்விஸ்ட், பின் அதற்கு மேல் ஒரு ட்விஸ்ட் என காட்சிகளை கடத்தியிருக்கிறார்.
ஒரே லொகேஷனில் இரண்டாம் பாதியை கொண்டு சென்றாலும் எங்கும் தொய்வு ஏற்படாத வகையில் சுவாரஸ்யமாக கொண்டு சென்றுள்ளார் ஜீத்து. என்றாலும், எதுக்குப்பா இவ்வளவு தூரம் முடிச்சுகளை போட்டு நகர்த்துகிறீங்க என்றுதான் கேட்க தோன்றுகிறது.

நடிகர்களை பொறுத்தவரை, போலீஸ் கதாபாத்திரத்தை கணகச்சிதமாக செய்யக்கூடிய பிஜு மேனன் இந்த முறையும் அதனை சிறப்பாக செய்துள்ளார். பிளாஷ்பேக் காட்சிகளில் அவரை டீ-ஏஜிங் செய்திருப்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் என்பது தெரியவில்லை.
எனினும் அதில் ஒரு மெனக்கெடல் தெரிகிறது. ஜோஜு ஜார்ஜ் பெரிய சம்பவங்களை செய்யப்போகிறார் என்று நினைப்பதற்கும் ஒரு ட்விஸ்ட். அது பெரிய ஏமாற்றம்தான். அவர் தனது வேலையை வழக்கம்போல் செய்துள்ளார்.

படத்தை தாங்குவது விஷ்ணு ஷியாமின் பின்னணி இசைதான். படம் முழுக்க முழுக்க விறுவிறுப்பாக செல்ல அவரது இசை பெரிதும் உதவியிருக்கிறது. சதீஷ் குரூப்பின் கேமரா ஒர்க் மிரட்டல். லெனா, வைஷ்ணவி ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளனர்.
க்ளாப்ஸ்
பிஜு மேனன், ஜோஜு ஜார்ஜ்
சுவாரஸ்யமான காட்சிகள்
பின்னணி இசை
பல்ப்ஸ்
யூகிக்கக்கூடிய முதல் பாதி மற்றும் கிளைமேக்ஸ்
ஓவர் ட்விஸ்ட்
மொத்தத்தில் இந்த வலது வஷத்தே கள்ளன் ஜீத்து ஜோசப் ரசிகர்களுக்கு போதாது என்றாலும், ஒருமுறை பார்க்கக்கூடிய டீசண்ட் வாட்ச் படம்தான்.
