தளபதி விஜய்யின் சிறந்த திரைப்படங்கள்.. வேற லெவல் மாஸ் லிஸ்ட் இதோ
நடிகர் விஜய் 1992ல் வெளிவந்த நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, பல கஷ்டங்களையும், அவமானங்களையும், பல வெற்றிகளையும் சந்தித்து, இன்று தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் என்ற இடத்தில் இருக்கிறார். இந்நிலையில், கடந்த 29 ஆண்டுகளில் விஜய் நடித்து வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து சிறப்பு பார்வை தான், இந்த கட்டுரை.. வாங்க பார்க்கலாம்..
பூவே உனக்காக
விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு குடும்ப பாங்கான கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் பூவே உனக்காக. அதுவரை சிறிய வெற்றியை பார்த்துவந்த நடிகர் விஜய்க்கு, பூவே உனக்காக திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை தேடி தந்தது. இன்று வரை பூவே உனக்காக படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனால், குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக பூவே உனக்காக அமைந்துள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சங்கீதா, நாகேஷ், எம். என். நம்பியார், சார்லீ, மலேஷியா வாசுதேவன், ஜெய் கணேஷ் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 90 காலகட்டத்தில் வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி சுமார் ஒரு வருடம் திரையரங்கில் ஓடியது.
காதலுக்கு மரியாதை
பூவே உனக்காக படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்க்கு குடும்ப ரசிகர்கள் கிடைத்திருந்தாலும், காதலுக்கு மரியாதை படம் தான், விஜய்க்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் விஜய்யை கொண்டு சேர்த்த திரைப்படம் காதலுக்கு மரியாதை. 1997ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சிவகுமார், ஷாலினி, ராதாரவி, சார்லீ, தாமு, மணிவண்ணன், உள்ளிட்ட பல நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் படத்தை போலவே சூப்பர்ஹிட்டானது. பாசில் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் விஜய்யின் திரை வாழ்க்கையை மாற்றி அமைத்தது.
துள்ளாத மனமும் துள்ளும்
எழில் இயக்கத்தில் முதன் முறையாக விஜய் மற்றும் சிம்ரன் ஜோடியாக நடித்து கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். வித்தியாசமான காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம், மீண்டும் விஜய்க்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. அதுமட்மின்றி இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களின் ஹிட் லிஸ்டில் இன்றும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் இன்னிசை பாடி வரும் பாடல் மற்றும் அந்த காட்சி இரண்டுமே விஜய் ரசிகர்களின் ஆல் டைம் Favourite.
குஷி
தொடர் தோல்வி படங்களுக்கு பின் விஜய்க்கு வெற்றியை கொடுத்த திரைப்படம் குஷி. இந்த வெற்றியை விஜய்க்கு தேடி தந்தவர் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்தில் விஜய்யுடன் இணைத்து ஜோதிகா, மும்தாஜ், விவேக், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. குறிப்பாக சொல்லவேண்டும் என்று சினிமாவில் இருந்து வெளியேற நினைத்த நடிகர் விஜய்யை மீண்டும் சினிமாவிற்குள் வரவழைத்த திரைப்படம் குஷி. இப்படம் மட்டும் வெற்றிபெறவில்லை என்றால், திரைத்துறையில் இருந்து வெளியேறியிருப்பேன் என்று, விஜயே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
திருமலை
காதல் நாயகனாக அனைவராலும் கொண்டாடப்பட்ட நடிகர் விஜய்யை, ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய திரைப்படம் திருமலை. ரமணா இயக்கத்தில் வெளிவந்த திருமலை படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா, ரகுவரன், கருணாஸ், விவேக், கௌசல்யா, நிழல்கள் ரவி, மனோஜ் கே. ஜெயன் என பலரும் நடித்திருந்தார்கள். இந்நிலையில், இப்படம் மொத்தமாக சுமார் ரூ. 39 கோடி வரை வசூல் செய்து அப்போதைய காலகட்டத்தில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.
கில்லி
திருமலை படத்தில் எந்தளவிற்கு ஆக்ஷன் ஹீரோவாக வந்தோரோ விஜய், அதைவிட பல மடங்கு ரசிகர்கள், விஜய்யை மாஸ் ஹீரோவாக கொண்டாடிய திரைப்படம் கில்லி. தரணி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் இரண்டிலும் மாபெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக இப்படத்தில் விஜய் பேசிய வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்தது. இப்படத்தில் விஜய்க்கு நிகரான வில்லன் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். விஜய்க்கு எந்த அளவிற்கு மாஸ் வரவேற்பு இருந்ததோ, அதே அளவிற்கான வரவேற்பு பிரகாஷ் ராஜக்கும் கிடைத்தது. படத்தின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணமாக விஷயசாகரின் இசை இருந்தது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கில்லி ஆல்பம் ஹிட் அடித்தது. மேலும், விஜய்யின் திரை வாழ்க்கையில் முதல் ரூ. 50 கோடி வசூல் செய்த திரைப்படமும் இதுவே ஆகும்.
திருப்பாச்சி
2005ஆம் ஆண்டு முதல் முறையாக பேரரசுடன் விஜய் கைகோர்த்து நடித்து திரைப்படம் திருப்பாச்சி. அண்ணன் தங்கை பாசத்தை கருவாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படம் கமெர்ஷியலாக மாஸ் ஹிட் ஆனது. இன்றும் இப்படத்தை தலைமேல் வைத்து கொண்டாடி வருகிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பசுபதி, உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தாலும், TRPல் கிங் என்று நிரூபிக்கிறது திருப்பாச்சி.
போக்கிரி
பிரபு தேவாவின் இயக்கத்தில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம், விஜய்க்கு திரை வாழ்க்கைக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது போக்கிரி. முதல் முறையாக காவல் துறை அதிகாரியாக நடித்து, அனைவரையும் அசரவைத்திருந்தார் நடிகர் விஜய். வித்யாசாகரின் இசையால், போக்கிரி ஆல்பம் ஹிட் ஆனது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து அசின், வடிவேலு, பிரகாஷ் ராஜ், நாசர், நடித்திருந்தனர். இன்றளவும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
காவலன்
சித்திக் இயக்கத்தில் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து, விஜய்யின் ரொமான்டிக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் காவலன். கதாநாயகியை நேரில் சந்திக்காமல், இருவருக்குள் நடக்கும் அழகிய உரையாடல், படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. மேலும், இப்படத்தில் வடிவேலு மற்றும் விஜய்யின் காமெடி இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஆல் டைம் Favourite தான். மேலும், இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பாடல்களும், படத்தின் வெற்றியை நிர்ணயம் செய்தது.
நண்பன்
விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, அணைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பார்த்து மகிழ்ந்த விஜய்யின் திரைப்படம் என்றால், அது நண்பன் தான். விஜய்யின் சுறுசுறுப்பான காமெடி கலந்த நடிப்பும். ஜீவா, ஸ்ரீகாந்தின் அலட்டல் இல்லாத நடிப்பும் படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றது. பிரம்மாண்டத்திற்கு பேர்போன இயக்குனர் ஷங்கர் குறைந்த பட்ஜெட்டில் இயக்கிய படங்களில் ஒன்றாகும் நண்பன். மூன்று நண்பர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் மாஸ் ரெஸ்பான்ஸ் பெற்று மீண்டும் ஒரு வெற்றியை விஜய்க்கு தேடி தந்தது.
துப்பாக்கி
சுறா, வில்லு, குருவி என தொடர் ஆக்ஷன் தோல்வி படங்களை கொடுத்த விஜய்யை மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டர் ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், வித்யுத் ஜாம்வால், ஜெயராம், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. குறிப்பாக ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து, விஜய்யின் திரை வாழ்க்கையில் முதல் ரூ. 100 கோடி படமாக துப்பாக்கி அமைந்தது.
கத்தி
துப்பாக்கி வெற்றி கூட்டணியை தொடர்ந்து விஜய்யின் திரை வாழ்க்கையில் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்தார் ஏ.ஆர். முருகதாஸ். படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காட்சியும் திரையரங்கில் ரசிகர்களால் வெறித்தனமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக காயின் பைட் மற்றும் விவசாயிகளுக்காக விஜய் பேசிய கிளைமாக்ஸ் ஸ்பீச் இரண்டுமே, இன்றும் ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்று. கதிரேசனாக ஒரு புறம் மாஸான நடிப்பையும், ஜீவானந்தமாக அலட்டல் இல்லாத நடிப்பை மறுபுறமும் காட்டியிருந்தார் விஜய். துப்பாக்கி படத்தை தொடர்ந்து கத்தி படமும் வசூலில் சுமார் ரூ. 125 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
தெறி
அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் திரைப்படம் தெறி. காவல் துறை அதிகாரி விஜய குமராகவும், பொறுப்பான தந்தை ஜோசப் குருவில்லாவாகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் தளபதி விஜய். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குனர் மஹேந்திரன், ராதிகா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
மெர்சல்
தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அட்லீயுடன் விஜய் கூட்டணி அமைத்த திரைப்படம் மெர்சல். மருத்துவத்துறையில் நடக்கும் தவறையும் மக்களுக்கு மருத்துவர்கள் செய்யும் தோர்கத்தையும் மெர்சல் திரைப்படம் எடுத்துக்காட்டியிருந்தனர். வெற்றி, மாறன், வெற்றிமாறன் என மூன்று கதாபாத்திரங்களில் அசத்தியிருந்த விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். இப்படம் ரூ. 250 கோடி வரை வசூல் செய்து, விஜய்யின் கமெர்ஷியல் திரை பயணத்தை உச்சத்திற்கு எடுத்து சென்றது.
மாஸ்டர்
இதுவரை நடித்து வந்த அணைத்து கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு, முதல் முறையாக வேறொரு பரிணாமத்தில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு நிகரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் பாராட்டை பெற்றார் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு என பலரும் நடித்திருந்தனர். கொரோனா காலகட்டத்தில் வெளிவந்திருந்தாலும், பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ. 225 கோடி வரை வசூல் செய்து, மீண்டும் தமிழ் திரையுலகை கொரோனா தாக்கத்தில் இருந்து மீட்டெடுத்தது மாஸ்டர் திரைப்படம்.
இப்படி கடந்த 29 ஆண்டுகளுக்கு தனது ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து விஜய் நடித்த சிறந்த படங்கள் என்றால், அதில் இவை இடம்பெறாமல் இருக்காது. பொறுத்திருந்து பார்ப்போம், இந்த லிஸ்டில், பீஸ்ட் இணைகிறதா என்று...
விஜய் கோட்டையிலே KGF 2-விடம் பின்வாங்கும் பீஸ்ட், இப்படி ஒரு சோதனையா தளபதிக்கு