என்றும் மனதில் இருந்து அழியா கலைஞன் டெல்லி கணேஷ்.. 'வாழ்க்கை வரலாறு'
தமிழ் சினிமா பெருமிதம் கொள்ளும் அளவிற்கு தனது நடிப்பால் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் டெல்லி கணேஷின் வாழ்க்கை வரலாறு குறித்து பார்க்கலாம் வாங்க..
ஆரம்ப வாழ்க்கை
திரையுலகில் என்றும் அளிக்கப்படாத ஒரு இடத்தை பிடித்துள்ள கலைஞர் டெல்லி கணேஷ். இவர் கடந்த 1944ஆம் ஆண்டு பிறந்துள்ளார். 1964ல் இருந்து 1974 வரை இந்திய வான்படை வீரராக இருந்து பின் திரையுலகில் நடிகராக களமிறங்கியுள்ளார்.
நாடக சபா - அறிமுக படம்
தக்ஷிண பாரத நாடக சபா குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். பின் 1977ஆம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த பட்டினப்பிரவேசம் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானார்.
டெல்லியில் பல நாடங்களில் நடித்து அதன்பின் சினிமாவிற்கு வந்த கணேஷ், திரையுலகில் தனித்துவமாக தெரியவேண்டும் என்பதற்காக டெல்லி கணேஷ் பெயர் வைத்துள்ளார் இயக்குனர் கே. பாலச்சந்தர்.
பாத்திரங்கள்
பெரும்பாலான படங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகராக மட்டுமே பணிபுரிந்துள்ளார். ஆனால், அபூர்வ சகோதரர்கள் மற்றும் சில படங்களில் வில்லனாகவும் மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பில் வெளிவந்த சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தெனாலி போன்ற படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இவர் 1976ல் இருந்து தற்போது வரை 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரை - வெப் தொடர்
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் இதுவரை 30க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் மாரி மற்றும் இலக்கியா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி நவரசா மற்றும் அமரிக்கா மாப்பிள்ளை போன்ற வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இதில் நவசரசா வெப் தொடரில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
விருதுகள்
1979 - பசி திரைப்படத்திற்கு தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். மேலும் 1993 - 1994 தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருதை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கையால் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.